

முன்னாள் துணை மேயர் பி.எம் மன்னன்
மதுரை: ‘என் மீதான குதிரை பேர வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்’ என்று முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னன் தெரிவித்தார்.
தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களிக்க அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் இரு தவணைகளில் ரூ.30 கோடி குதிரை பேரம் பேசியதாக சில நாட்களுக்கு முன்பு மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ மதார் பதுரூதீன் (எ) முஸ்தபா குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் முஸ்தபா தரப்பில் கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார், மாநகராட்சி முன்னாள் துணை மேயரும், அதிமுக கொள்கை பரப்பு மாநில துணைச் செயலாளருமான பி.எம்.மன்னன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவரை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜோசப் ஜாய் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். போலீஸ் சம்மன் மூலம் நவம்பர் 7-ம் தேதி விசாரணைக்கு அழைத்துவிட்டு முன்கூட்டியே கைது செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, பி.எம்.மன்னனை சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார். அதேநேரம், சம்மனில் குறிப்பிட்டபடி போலீஸாரிடம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.
அதன்படி, மத்திய குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் நேற்று காலை 10 மணியளவில் பி.எம்.மன்னன் தனது வழக்கறிஞர்கள், ஆதரவாளர்களுடன் வந்து ஆஜரானார். காவல் உதவி ஆணையர் ஆரோக்கியராஜ் 5 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினார். எம்எல்ஏ உதவியாளர் கனிராஜ் தெரிவித்த சில தகவல்களின் அடிப்படையில் மன்னனிடம் போலீஸார் கேள்விகளை கேட்டனர்.
விசாரணை முடிந்து காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த பி.எம்.மன்னன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “போலீஸார் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முறையாக பதிலளித்தேன். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக தயார் என தெரிவித்துள்ளேன்.
என் மீது பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். ஏற்கெனவே, நான் அரசியல் ரீதியான அனைத்து வழக்குகளையும் எதிர்கொண்டவன் என்ற அடிப்படையில், இவ்வழக்கையும் எதிர்கொள்வேன்” என்று கூறினார். நீங்கள் பேசியதற்கு ஆடியோ ஆதாரம் உள்ளதாக முஸ்தபா கூறுகிறாரே என்ற கேள்விக்கு, ‘அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்’ என்று பி.எம்.மன்னன் பதிலளித்தார்.