

மனிதநேய ஜனநாயக கட்சியின் 10-ம் ஆண்டு நிறைவு விழாவில், கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி எழுதிய `சட்டசபையில் சமூக நீதி குரல்' என்ற நூல் அறிமுகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட உள்ளதாக மனிதநேய ஜனநாயகக் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மனிதநேய ஜனநாயகக் கட்சியின் 10-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில், சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது.
‘வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதுடன், 234 தொகுதிகளிலும் கூட்டணி கட்சியினரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு பெயரில் நுழைவுவாயில் அமைக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மாலையில், இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து தமிமுன் அன்சாரி எழுதிய ‘சட்ட சபையில் சமூக நீதி குரல்’ என்ற நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
நூலை தமிமுன் அன்சாரி வெளியிட, கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும்இஸ்லாமிய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் தமிமுன் அன்சாரி பேசியதாவது: தமிழகமும், கேரளாவும் சமூக நல்லிணக்கத்துக்கு முன்மாதிரியாக உள்ளன. நாங்கள் மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக இருக்கிறோம். அனைவரது உணர்வையும் மதிக்கும் விதத்தில், இந்து மக்களுக்காக சைவ கஞ்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைவரையும் உற்ற நண்பர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பை வீழ்த்த முடியும்.
‘சட்டசபையில் சமூக நீதி குரல்’ புத்தகத்தை ஓராண்டு கடினப்பட்டு உருவாக்கி உள்ளோம். தலைப்பு வாரியாகவும் உள்தலைப்பு கொடுத்தும் புத்தகத்தை உருவாக்கி உள்ளேன்.
எனது உரையின்போது சபாநாயகர் குறுக்கீடு, துணை சபாநாயகர் குறுக்கீடு, பேரவையில் பேசியபோது எனக்கு இரண்டு முதல்வர்கள் பதில் அளித்தது ஆகியவை குறித்தும் தெரிவித்துள்ளேன். இங்கு இருப்பவர்கள் சிலரை ஜூன் மாதத்தில் மீண்டும் சட்டப்பேரவையில் சந்திப்போம். இவ்வாறு அவர் பேசினார்.