

கரூர்: கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், ஜன.12-ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக கட்சித் தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டிஜிபி.க்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் டிச.2, 3-ம் தேதிகளில் கரூர் வந்து ஆய்வு செய்தனர். இதையடுத்து, அடுத்தகட்ட விசாரணைக்காக டெல்லி சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகுமாறு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் மற்றும் ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி. ஜோஸ் தங்கையா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் அனைவரும் டிச.29-ம் தேதி ஆஜராகினர். அவர்களிடம் 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஜன.12-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.