“எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்காமல் இருக்க...” - முதல்வர் அறிவிப்புகளுக்கு மாணிக்கம் தாகூர் பாராட்டு

“எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்காமல் இருக்க...” - முதல்வர் அறிவிப்புகளுக்கு மாணிக்கம் தாகூர் பாராட்டு
Updated on
2 min read

மதுரை: “எம்எல்ஏ-க்கள் லஞ்சம் வாங்காமல் இருக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு தேவையான விசயங்கள் செய்து கொடுக்க வேண்டும். அந்த வகையில் அரசு சார்பில் எம்எல்ஏக்களுக்கு உரிய சம்பளம், தகுந்த வசதிகள் செய்து கொடுக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் விஜய்யின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது” என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட தியாகி சத்தியமூர்த்தியின் 139-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழக அமைச்சரவையில் 59 ஆண்டுக்குப் பின் காங்கிரஸ் அமைச்சர்கள் மானியக் கோரிக்கையில் பங்கேற்கின்றனர். சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார், உலக அளவில் தமிழகத்தை சிறந்த சுற்றுலாத் தலமாக உயர்த்தும் வகையில் செயல்படுவார்.

இந்தியாவில் கேரளம், இமாச்சல் பிரதேசம், கோவா போன்று தமிழகத்தையும் சுற்றுலாத் துறையில் மேம்படுத்துவார்.

இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் முகமாக ராகுல் காந்தியும், தமிழகத்தின் முகமாக விஜய்யும் உள்ளார்.

எம்எல்ஏ-க்கள் லஞ்சம் வாங்காமல் இருக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு தேவையான விஷயங்கள் செய்து கொடுக்க வேண்டும். அந்த வகையில் அரசு சார்பில் எம்எல்ஏக்களுக்கு உரிய சம்பளம், தகுந்த வசதிகள் செய்து கொடுக்கும் அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வர் விஜய்யின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது லட்சிய கனவு. ஆனால், யதார்த்தத்தில் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் அமுல்படுத்தவில்லை. கர்நாடக அரசு தமிழர்களை சுட்டுக் கொன்றது மிகப் பெரும் கொடுமை. அதில் ஈடுபட்ட அரசுத் துறை அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

கர்நாடக அரசு ரூ.15 லட்சம் அறிவித்தது போதாது. கூடுதலாக வழங்க வேண்டும். கர்நாடக முதல்வர் சிவக்குமார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழகத்துக்கு எதிராக செயல்படும்போது, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

அதேபோல், கர்நாடகாவில் மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராக செயல்பாடும் அங்குள்ள பாஜகவைச் சேர்ந்த பொம்மை உள்ளிட்டோரை கண்டிக்க துப்பில்லாத தமிழக பாஜகவையும், தலைவர் நயினார் நாகேந்திரனையும் கண்டிக்கிறோம்.

தமிழக இளைஞர்கள் மற்ற மாநிலங்களில் வேலை பார்ப்பதுபோல், மற்ற மாநிலத்தினர் தமிழகத்தில் வந்து வேலை பார்ப்பது தவறில்லை.

தவெக தலைமையில் 6 கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளோம். அதில் 4 கட்சிகள் அமைச்சரவையில் உள்ளோம். சிபிஐ, சிபிஎம் வெளியிலிருந்து ஆதரவு தருகின்றனர். கூட்டணிக்கு பேர் வைக்க தமிழக முதல்வர் விஜய் தீவிர முனைப்போடு உள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்ததைபோல் தற்போதும் காவல் துறை செயல்படுகிறது. காவல் துறையில் சீர்திருத்தம் முக்கியம். காவல் நிலைய மரணங்களை குறைக்க தமிழக முதல்வர் முயற்சி எடுக்க வேண்டும்.

பிரதமர் மோடியும், அமித் ஷாவும் மாணவர்கள் போராட்டத்தால் பயந்து போயுள்ளனர். மாணவர்கள் போராட அரசியல் உரிமை உள்ளது. ஜனநாயகப் பூர்வமாக போராடுவதை ஆதரிக்கிறோம். போதையில்லாத தமிழகம் உருவாவதற்கு தமிழக முதல்வர் விஜய் முயற்சி எடுத்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் இல்லை, ஒரே கோஷ்டிதான் உள்ளது. அனைவரும் ராகுல் காந்தி கோஷ்டிதான். 83-வது சுதந்திர தின விழாவில் இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி கொடியேற்றும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் லட்சியத்துடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்” என்று அவர் கூறினார்.

“எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்காமல் இருக்க...” - முதல்வர் அறிவிப்புகளுக்கு மாணிக்கம் தாகூர் பாராட்டு
முதல்வர் விஜய் அறிவிப்புக்கு அதிருப்தி: பால் கொள்முதல் விலையில் ரூ.10 உயர்த்த வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in