

மாணிக்கம் தாகூர்
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூரை நியமித்து காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை கடந்த 2024-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அவரது செயல்பாடுகளால் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர், எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக அவரும் தொடர்ந்து கூறி வந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூரை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் கூறியதாவது: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 35 தொகுதியிலாவது காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என ராகுல் காந்தி விரும்பினார். ஆனால், ப.சிதம்பரத்தை கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குள் கொண்டு வந்து, தேசியத் தலைமையை 28 இடங்களுக்கு ஒப்புக்கொள்ள வைத்தார் செல்வப்பெருந்தகை. இதுதவிர, வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடி நடந்ததாக தமிழக மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஹசீனா சையத் கிளப்பிய குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் அடிப்படையிலேயே, செல்வப்பெருந்தகையை மாற்ற டெல்லி தலைமை முடிவு எடுத்தது.
மாநிலத் தலைவர் பதவியைக் கைப்பற்ற கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, செல்லக்குமார், ராஜேஷ்குமார் ஆகியோரும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தியின் முழு ஆதரவுடன் மாநிலத் தலைவர் பதவியை மாணிக்கம் தாகூர் கைப்பற்றியுள்ளார். இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
சிவகங்கையில் பிறந்த மாணிக்கம் தாகூர் (51), இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பில் (என்எஸ்யூஐ) இணைந்தார். கடந்த 2009, 2019, 2024 மக்களவை பொதுத் தேர்தல்களில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யானார். 2014 பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் தோல்வியடைந்தார். கட்சியின் பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும், பிற மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரக் களத்தில் இருந்தே திமுகவை இவர் கடுமையாக விமர்சித்து வருகிறார். முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் காங்கிரஸில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.