

புதுச்சேரி: பெரும்பாலும் தமிழகத்துடன் இணைத்தே புதுச்சேரிக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும். இந்த முறை வழக்கத்துக்கு மாறாக ஏப். 9-ம் தேதி முன்கூட்டியே நடைபெறுகிறது. அதன்படி பிரச்சாரம் ஏப். 7-ம் தேதியுடன் முடிகிறது.
தமிழகத்தைக் காட்டிலும் இரு வாரங்கள் முன்னரே நடப்பதால், தொடக்கம் முதலே கூட்டணி அமைப்பதில் இருந்து, வேட்பு மனுத்தாக்கல், பிரச்சாரம் என பலவற்றிலும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் திடீர் நெருக்கடியை எதிர் கொண்டனர்.
தேர்தல் ஆணையத்தின்கால அவகாசம் இல்லாத இந்த அறிவிப்பால், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கையை இதுவரை வெளிவிடாமலேயே பிரச்சார களத்துக்கு வந்து விட்டனர்.
தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், முக்கிய கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை எப்போது வெளியிடும் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர்ஜெகன்நாதன் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டு, உரிய கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் அளித்திருந்தது. இதனால் தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அறிக்கையை வெளியிட கால அவகாசம் கிடைத்துள்ளது.
ஒரே நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அதில் புதுச்சேரிக்கு மட்டும் இரு வாரங்களுக்கு முன்பே நடத்துவது நியாயம் இல்லை. இதனால் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தேர்தல் வாக்குறுதி எதையும் மக்களுக்கு அளிக்காமல் தேர்தலை சந்திக்கின்றனர். இது ஜனநாயக மாண்புகளுக்கு உகந்த செயல் ஆகாது. இந்த நெருக்கடியைத் தாண்டி,புதுச்சேரியின் அனைத்து முக்கிய கட்சிகளும் உடனே தங்களது வாக்குறுதிகள் உள்ளடக்கிய தேர்தல் அறிக்கைகளை வெளியிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.