

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் 152 தொகுதிகளிலும், 2-ம் கட்ட தேர்தல் 142 தொகுதிகளிலும் நடைபெறுகிறது.
இந்நிலையில், கொல்கத்தாவுக்கு நேற்று வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கடந்த 15 ஆண்டு ஆட்சிக்கு எதிரான ‘குற்றப்பத்திரிகை’யை வெளியிட்டு பேசியதாவது: முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 15 ஆண்டுகளாக பொய், வன்முறை மற்றும் ஊழல் அரசியலைத்தான் வளர்த்தார்.
இந்த தேர்தலில் மேற்குவங்க மக்கள் அச்சம் மற்றும் நம்பிக்கை ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். தனது அரசியலை முன்னெடுக்க பொய் மற்றும் வன்முறையை பயன்படுத்தி புதுவித அரசியலை மம்தா உருவாக்கினார்.
இதை எதிர்த்து கடந்த 2011-ம் ஆண்டு முதல் பாஜக போராடிக் கொண்டிருக்கிறது. இந்த முறை பாஜக ஆட்சி அமைக்கும் என நம்புகிறேன். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டு கால ஆட்சிக்கு எதிரான ‘குற்றப்பத்திரிகையுடன்’ நாங்கள் வந்துள்ளோம். மேற்குவங்க மக்கள் சார்பில் திரிணமூல் காங்கிரசுக்கு எதிராக இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.
மேற்குவங்கத்தில் பாஜக அரசை அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக தொண்டர்கள் களம் இறங்கியுள்ளனர். மேற்குவங்க தேர்தல் நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானது. அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்தபின், ஊடுருவல் முடிவுக்கு வந்தது. தற்போது நாட்டில் மேற்கு வங்கம் வழியாக மட்டும்தான் ஊடுருவல் நடைபெறுகிறது.
எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி மேற்கு வங்கம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, இங்கு நிலவும் ஒழுங்கின்மை, அராஜகம், பொருளாதார வீழ்ச்சி, ஊடுருவல் குறித்து மக்களிடம் எடுத்துரைப்பார். திரிணமூல் கட்சி, மேற்கு வங்கத்தை குற்றவாளிகளின் கூடாரமாக மாற்றி, தொழில் வளர்ச்சியற்ற மாநிலமாக ஆக்கிவிட்டது. இவ்வாறு அமித் ஷா கூறினார்.