

காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களிடம் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளர் நித்யா.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் சுற்றிச் சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 17 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. திமுக சார்பில் நித்யா, அதிமுக சார்பில் மாவட்டச் செயலர் வி.சோமசுந்தரம், நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றிச் செல்வி, தவெக சார்பில் ரஞ்சித் குமார் உள்பட சுயேட்சைகள், சில அமைப்புகளைச் சார்ந்தோர் போட்டியிடுகின்றனர்.
திமுக - நலத் திட்டங்கள் முன்வைப்பு
திமுக சார்பில் போட்டியிடும் நித்யா, திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களையும், கடந்த கால சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரித்து வருகிறார்.
மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் மக்களைச் சென்றடைந்ததை சுட்டிக்காட்டியும், காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம், நெசவாளர் நலன் மற்றும் தொகுதி வளர்ச்சிக்கான புதிய வாக்குறுதிகளையும் அளித்து வருகிறார்.
காஞ்சிபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரம்.
அதிமுக - தேர்தல் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டல்
அதிமுக வேட்பாளரும் மூத்த அரசியல்வாதியுமான வி.சோமசுந்தரம், அதிமுக ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்களிடம் நினைவூட்டி வருகிறார்.
தற்போதைய அரசின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை விளக்கியும் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே கிராமப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாதக வேட்பாளர் வெற்றிச்செல்வி.
நாதக - சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்வைப்பு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றிச் செல்வி, தற்சார்பு விவசாயம், நீர்நிலைகளைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார். நேரடியாக மக்களைச் சந்தித்து எளிய முறையில் வாக்கு சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
தவெக - மாற்றத்துக்கான வாய்ப்பு கோரிக்கை
தவெக வேட்பாளர் ரஞ்சித் குமார், முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். புதிய அரசியல் மாற்றத்தை விரும்புவோரின் ஆதரவைத் திரட்டும் நோக்கில், இளைஞர்களையும் பெண்களையும் கவரும் வகையில் நவீன யுக்திகளுடன் கூடிய பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் இவர், மாற்றத்துக்கான ஒரு வாய்ப்பை வழங்கக் கோரி வாக்கு சேகரித்து வருகிறார்.
முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிய தவெக வேட்பாளர் ரஞ்சித் குமார்.
காஞ்சிபுரம் மாநகரம் முதல் ஊரகப் பகுதிகள் வரை அனைத்து இடங்களிலும் வேட்பாளர்கள் திறந்தவெளி வாகனங்களிலும், வீடு வீடாகவும் சென்று வாக்கு சேகரிப்பதால் ஈடுபட்டுள்ளதால், தொகுதி முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.