

புதுச்சேரி: “எனக்கு எதிராக பெரும் சதி நடக்கிறது” என சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திடீர் கருத்து தெரிவித்தார்.
புதுவை சட்டப்பேரவையில் இன்று துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அதில் புதிதாக தேர்வான என்.ஆர்.காங். எம்எல்ஏ அய்யப்பன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருக்கையில் இருந்தபடி அமைச்சர் நமச்சிவாயம், முதல்வர் ரங்கசாமியுடன் பேசிக் கொண்டிருந்தார்.
இதனைக் கண்ட பேரவைத் தலைவர் அன்பழகன், "உறுப்பினர்கள் பேசும்போது அமைச்சர்கள் சட்டப்பேரவையில் இருக்க வேண்டும். அதிகாரிகளை வைத்து ஆய்வு கூட்டம் நடத்தக் கூடாது. எம்எல்ஏ பேசும்போது , சில கோரிக்கைகள் வைப்பார்கள், அதை அமைச்சர்கள் காது கொடுத்து கேட்க வேண்டும். தற்போது கூட முதல்வருடன் உள்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருந்தார். இந்த நெருக்கத்தை தேர்தல் முடிந்த பிறகு காட்டி இருந்தால் எவ்வளவோ பிரச்சனை தீர்ந்து இருக்கும்” என அன்பழகன் குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் நமச்சிவாயம், “உறுப்பினர்கள் பலரும் வைக்கும் கோரிக்கையை முதல்வருடன் பேசிதான் தீர்க்க வேண்டும். அநாவசியமாக பேசவில்லை. அதைத்தான் முதலவரிடம் கூறிக் கொண்டிருந்தேன். எனக்கு எதிராக பெரும் சதியே நடக்கிறது. எனக்கெதிராக ஒரு கூட்டமே இருக்கிறது. இதன் பின்னால் ஒரு குழு இருக்கிறது. அதில் சபாநாயகர் உட்பட பலர் இருக்கின்றனர்" என்றார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் எழுந்து உள்துறை அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லையா...? என்றார். அமைச்சரும் தனது கருத்தை குறிப்பிட்டார்.
அதற்கு பேரவைத்தலைவர் அன்பழகன், “நான் கூறியதில் உள்நோக்கம் இல்லை. காதோடு காதாக முதல்வருடன் உள்துறை அமைச்சர் பேசுவது அற்புதமாக இருந்தது. தேர்தல் முடிந்த பிறகு பேசியிருக்கலாம்,” என்றார்.