

சென்னை: கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், நாளை 3 மண்டலங்களில் சில இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இப்பணி காரணமாக, நாளை (12-ம் தேதி) காலை 9 மணி முதல் 13-ம் தேதி காலை 9 மணி வரை குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம், 3 மண்டலங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
அதன்படி, அடையார் மண்டலத்தில் திருவான்மியூர், வேளச்சேரி, கோட்டூர் கார்டன், ஆர்.கே.மடம் சாலை, இந்திரா நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பெருங்குடி மண்டலத்தில் கொட்டிவாக்கம், பாலவாக்கம், கந்தன்சாவடி, பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், ஜல்லடியான்பேட்டை, உள்ளகரம், புழுதிவாக்கம், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, காரப்பாக்கம், வெட்டுவாங்கேணி, சோழிங்கநல்லூர், ஒக்கியம்-துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, போதுமான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.