

மகேஷ்குமார் அகர்வால்
சென்னை: தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபி-யாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் ஓய்வுபெற்றார். அவர் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே, அடுத்து தகுதிவாய்ந்த டிஜிபி-க்களின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) மாநில அரசு அனுப்பிவைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடைபெறாமல் ஜூனியரான வெங்கட ராமனை பொறுப்பு டிஜிபி-யாக தமிழக அரசு நியமித்தது.
இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தபோது, சந்தீப் ராய் ரத்தோரை சட்டம் - ஒழுங்கு டிஜிபி-யாக தேர்தல் ஆணையம் நியமித்தது. தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டநிலையில், தமிழகத்தில் புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக மத்திய பணியாளர் தேர்வாணைய ஆலோசனைக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடைபெற்றது.
இதில் தமிழக தலைமைச் செயலர் சாய்குமார், உள்துறை செயலர் மணிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், டிஜிபி-க்களான ராஜீவ்குமார் (காவல் உயர் பயிற்சியகம்), சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் (அயல் பணியாக எல்லை பாதுகாப்பு படை-டெல்லி) ஆகிய 3 பேர் பட்டியலுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒப்புதல் வழங்கி தமிழக அரசுக்கு அவர்களின் பெயர்களை பரிந்துரைத்தது. இந்நிலையில், தமிழகத்தின் புதிய டிஜிபி-யாக மகேஷ் குமார் அகர்வால் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய டிஜிபி அறிமுகம்: கடந்த 1994-ம் ஆண்டு தமிழக பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால் பஞ்சாப் மாநிலம் பதிந்தா பகுதியைச் சேர்ந்தவர். சட்டம் பயின்றவர். 22 வயதிலேயே ஐபிஎஸ் அதிகாரியானார். தமிழ், இந்தி, ஆங்கிலம், பஞ்சாப் மொழியில் சரளமாக பேசக்கூடியவர். தேனி, தூத்துக்குடி மாவட்டங்களின் எஸ்.பி., சென்னை பூக்கடை துணை ஆணையர், சென்னை போக்குவரத்து காவல் தெற்கு துணை ஆணையர் எனப் பொறுப்பு வகித்தார்.
அயல்பணி: பின்னர் 7 ஆண்டுகள் சிபிஐ அதிகாரியாக பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றினார். தொடர்ந்து ஐஜி-யாகப் பதவி உயர்வுபெற்று தமிழகம் திரும்பி சிபிசிஐடி ஐஜி-யாகப் பதவி வகித்தார். மேலும் அவர் மதுரை காவல் ஆணையரானார். மீண்டும் சிபிசிஐடி ஐஜி ஆனார். பின்னர் சென்னை தெற்கு கூடுதல் ஆணையராகப் பொறுப்பேற்றார்.
தொடர்ந்து செயலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த மகேஷ்குமார் 2020-ம் ஆண்டு சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்றார். பின்னர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிஐடி கூடுதல் டிஜிபியாக இருந்தார். அதன் பின்னர் அயல்பணியாக டெல்லி சென்ற அவர், தற்போது தமிழக டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறந்த பணிக்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தையும், பொது சேவையில் சிறந்து விளங்கியதற்காக முதல்வர் பதக்கத்தையும் வென்ற இவர் சிபிஐ, சிபிசிஐடி உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளிலும் திறம்பட செயலாற்றியவர்.