

சட்டபேரவை தேர்தலையொட்டி போட்டியிடும் மற்றொரு கட்சிக்கும் விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், சீமானுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தல் வரை ‘கரும்பு விவசாயி’ சின்னத்தில் களம் கண்டு வந்த நாம் தமிழர் கட்சிக்கு, கடந்த 2024 மக்களவைத் தேர்தலின் போது அந்தச் சின்னம் தேர்தல் ஆணையத்தால் மறுக்கப்பட்டது. முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் ‘கரும்பு விவசாயி’ சின்னம் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், வேறு வழியின்றி அப்போது ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் சீமான் போட்டியிட்டார்.
புதிய சின்னத்தில் போட்டியிட்டாலும், அந்தத் தேர்தலில் 8.19 சதவீத வாக்குகளை அறுவடை செய்த நாதக, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை எட்டியது.
இதைத் தொடர்ந்து, கடந்த 14 ஆண்டு காலப் போராட்டத் திற்குப் பிறகு நாதக-வுக்கு ‘ஏர் கலப்பையுடன் கூடிய விவசாயி’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 2025 மே மாதம் ஒதுக்கி அறிவித்தது. இதனால், வரும் சட்டப்பேரவை தேர்தலில் சின்னத்தில் எவ்விதக் குழப்பமும் இன்றி தங்களது அரசியல் பயணத்தைத் தொடரலாம் என அக்கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.
ஆனால், தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்தியக் குடியரசு கட்சிக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை ஒதுக்கியிருப்பது நாதக-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே மாதிரியான பெயரைக் கொண்ட இரு சின்னங்கள் தேர்தல் களத்தில் இருப்பது வாக்காளர்களிடையே பெரும் குழப்பத்தை விளைவிக்கக் கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக, கிராமப்புற வாக்குச்சாவடி மின்னணு இயந்திரங்களில் ‘ஏர் கலப்பை விவசாயி’ மற்றும் ‘கரும்பு விவசாயி’ ஆகிய இரு சின்னங்களும் அருகருகே இடம்பெறும் பட்சத்தில், முதியவர்கள் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாத வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதில் தடுமாற்றம் அடைய வாய்ப்புள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் இத்தகைய குழப்பத்தால் ஒரு சில தொகுதிகளில் நாதக சில ஆயிரம் வாக்குகளை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தற்போது தங்கள் கட்சிக்கு கிடைத்துள்ள நிரந்தரச் சின்னமான ‘ஏர் கலப்பை விவசாயி’யை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சீமான் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அந்தஸ்து ஒருபுறம் பலமாக இருந்தாலும், பழைய அடையாளமான ‘கரும்பு விவசாயி’ சின்னம் மற்றொரு கட்சிக்கு சென்றிருப்பது தேர்தல் களத்தில் நாதக-வுக்கு புதிய சவாலாகவே பார்க்கப்படுகிறது. இதை சீமான் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
விஜய்க்கு சீமான் அட்வைஸ்: சட்டப்பேரவை தேர்தலையொட்டி 234 தொகுதிகளுக்கும் நாம் தமிழர்கட்சி சார்பாக போட்டியிட தேர்வுசெய்யப்பட்டிருக்கும் வேட்பாளர்களுடனான கலந்தாலோசனை கூட்டம், சீமான் தலைமையில் போரூரில் நேற்றுநடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருச்சியில் பிப்.21 நடைபெறும் மாநாட்டில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவிப்போம். புதுச்சேரிக்கு தனியாக அறிவிப்போம்.
மக்கள் எங்கு விரும்புகிறார்களோ அந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன். முன்பு கூட தவெக தலைவர் விஜய் என்னிடம் கூட்டணியில் காங்கிரஸை சேர்த்து கொள்ளலாமா எனக் கேட்டார். காங்கிரஸ் கட்சியை சேர்த்து எந்த அரசியலை பேசமுடியும்? என அவரிடம் கேட்டேன். கச்சத்தீவு, காவிரி நதிநீர் உரிமை, மீத்தேன் எடுத்தல் என்ற பெயரில் நிலத்தை சுரண்டுதல் போன்றவற்றை பற்றியா பேசமுடியும்? இந்தியை திணித்தவர்களும் அவர்கள் தானே. விஜய் காங்கிரஸை சேர்த்து கொள்ள நினைக்கிறார். எங்களுக்கு தேசிய கட்சிகள், திராவிட கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.