

தலைமைச் செயலகத்தில் தொழில், வர்த்தகத் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று நடந்தது. தலைமைச் செயலர் சாய்குமார், துறை செயலர் அருண் ராய், டிட்கோ மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி, சிப்காட் மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் அலர்மேல்மங்கை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை: மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இத்திட்டத்தை அரசு மறுசீரமைப்பு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் உயர்கல்வியைத் தொடர்வதற்காக புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய கல்வி உதவித் தொகை திட்டங்கள் முந்தைய திமுக ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்படி, புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளுக்கும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கும் மாதம்தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி இந்த தொகை வரவு வைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைத்துள்ளது. முந்தைய அரசுகளால் கொண்டு வரப்பட்ட முக்கிய மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் உறுதியளித்தார். இதன் தொடர்ச்சியாக, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 உதவித் தொகை அனைத்து மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கிலும் நேற்று வரவு வைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதம் 15-ம் தேதியும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் விஜய் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. நடப்பு மே மாதத்துக்கான உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம் முதல்வரின் அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில், ‘திமுக அரசின் திட்டங்கள் தொடரும் என்று சட்டப்பேரவையில் சொன்னீர்கள்? மகளிர் உரிமைத் தொகையை மே 15-ம் தேதி வரவு வைக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள திட்டத்தை தொடர எதற்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு செய்யப் போகிறீர்கள்? மாதம் ரூ.2,500 தருவதாக வாக்குறுதி தந்துவிட்டு, ரூ.1,000 கூட தராமல் இழுத்தடிப்பதுதான் உங்கள் மாற்றமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் ஆலோசனை: அரசின் நிதிநிலையைப் பொருத்து நலத் திட்டங்களை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க வேண்டும். அரசின் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கடந்த 10-ம் தேதி முதல்வராக பதவியேற்ற விழாவிலேயே விஜய் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக துறைசார்ந்த உயர் அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார்.
தலைமைச் செயலர் சாய்குமார், நிதித் துறை செயலர் எம்.ஏ.சித்திக் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட், புதிய திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதி ஒதுக்கீடு, முந்தைய திமுக ஆட்சியில் நிதிசார் செயல்பாடுகள் தொடர்பான வெள்ளை அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் வர்த்தகத் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.