கோப்புப் படம்

கோப்புப் படம்

மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5000 - வரவேற்பும் விமர்சனமும்

Published on

மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5,000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்றும், விமர்சித்தும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: சட்டப்பேரவை தேர்தலை காட்டி அடுத்த சில மாதங்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தடுக்கப் பார்த்தவர்கள், வாயடைத்துப் போகும் வகையில் 1.31 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் என்றால் மகளிர் நாடு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது திமுக அரசு.

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முடக்க பாஜக முயற்சித்த தடைகளையெல்லாம் தகர்த்து இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: மகளிர் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களால் பெண்களின் பேராதரவு திமுக-வுக்கு பெருகிக்கொண்டே போகிறது.

விசிக தலைவர் திருமாவளவன்: முதல்வர் செய்த இந்த அறிவிப்பு இன்ப அதிர்ச்சியை அளிக்கிறது. இது வெறும் வாக்குக்கானதல்ல. மகளிரின் வலிமைக்கானது.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் முதல்வர். திமுக-வுக்கு செல்வாக்கு உயர்ந்து விடுமோ என்ற அச்சத்தால் மத்திய அரசு முட்டுக்கட்டை போட நினைப்பது கண்டனத்துக்குரியது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்: முதல்வரின் அறிவிப்பு அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மநீம தலைவர் கமல்ஹாசன்: இது அற்புதமான அறிவிப்பு. இதற்கு பொறாமைபட்டு திட்டத்தை தடுப்பதற்கு பதிலாக, இதைவிட சிறப்பாக செய்யவேண்டும் என அடுத்த தலைவர்கள் நினைத்தால் தமிழகம் தலைநகரமாகிவிடும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்: 3 மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்க பார்த்த நிலையில், தமிழக மகளிருக்கு ரூ.5000 வழங்கியிருப்பது திமுக ஆட்சிக்கு மேலும் ஒரு மகுடம்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: வலையை விரித்து இரையை பிடிப்பது போல, இப்போது ரூ.5,000 பணத்தை கொடுத்து, அவல ஆட்சியின் சுவடுகளை மறைத்துவிடலாம் என தப்புக்கணக்கு போடுகிறது திமுக. இது தேர்தல் தோல்வி அச்சத்தில் கொடுக்கப்பட்ட அச்சார தொகை. இந்த மோசடி திட்டத்தை நம்புவதற்கு தமிழக மகளிர் முட்டாள்கள் அல்ல.

பாமக தலைவர் அன்புமணி: ஆட்சி கையை விட்டுப் போவது உறுதியானதை உணர்ந்து கொண்ட திமுக அரசு, பெண்களுக்கு திடீரென ரூ.5 ஆயிரத்தை வழங்கியிருப்பது, தோல்வியின் வெளிப்பாடாகும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தேர்தலை காரணம் காட்டி ஒரு கையில் பணம் கொடுத்து மறு கையில் டாஸ்மாக் மூலம் பணம் பறித்து வருவாயை பெருக்க முயற்சிக்கிறது தமிழக அரசு.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: இந்த அறிவிப்பு திமுக-வுக்கு ஏற்பட்டிருக்கும் தேர்தல் தோல்வி பயம் தானே தவிர, மகளிர் மீதான உண்மையான அக்கறை இல்லை.

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: இது தேர்தல் வருவதை கணக்கிட்டு மக்களின் வாக்கை பறிக்கும் சூழ்ச்சியாகும். ரூ.5000 வழங்கி அடுத்த 5 ஆண்டுகள் தமிழகத்தை கொள்ளையடிக்கத் துடிக்கிறது திமுக அரசு.

தவெக தலைவர் விஜய்: வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான் திமுக அறிவிப்புக்கு காரணம். திமுக தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி என கருதுவது தவெக-வை தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் முதல்வர் உறுதி செய்துள்ளார்.

இதேபோல் புதிய தமிழகம் கட்சி தலைவர் க.கிருஷ்ணசாமி விமர்சித்தும், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வரவேற்றும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
1.31 கோடி மகளிருக்கு 3 மாத உரிமைத் தொகை, கோடை சிறப்பு தொகை: ஒரே தவணையில் ரூ.5,000 வரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in