1.31 கோடி மகளிருக்கு 3 மாத உரிமைத் தொகை, கோடை சிறப்பு தொகை: ஒரே தவணையில் ரூ.5,000 வரவு
சென்னை: தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் 3 மாத மகளிர் உரிமைத் தொகை தலா ரூ.1,000 மற்றும் கோடைகால சிறப்பு தொகை ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 ஒரே தவணையாக நேற்று வரவு வைக்கப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மாதாந்திர மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலையொட்டி மு.க. ஸ்டாலின் வெளியிட்ட 7 வாக்குறுதிகளில் ஒன்று, மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்பதாகும். இத்திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு 1.06 கோடி மகளிரை பயனாளிகளாகக் கொண்டு தொடங்கப்பட்டு, அதன்பிறகு 1.13 கோடியாக உயர்த்தப்பட்டது. சமீபத்தில் இந்த எண்ணிக்கை 1.31கோடியாக உயர்ந்தது. மாதம்தோறும் 15-ம் தேதி இந்த தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
பெண்கள் மகிழ்ச்சி: இந்நிலையில், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை தலா ரூ.1,000 மற்றும் கோடைகால சிறப்புத் தொகை ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 தொகை 1.31 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேற்று காலை ஒரே தவணையாக செலுத்தப்பட்டது. மாதம்தோறும் ரூ.1,000 பெற்று வரும் பெண்கள் ஒரே தவணையில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட காணொலியில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு சார்பில் இன்று (பிப்.13) காலையில் உங்கள் கணக்கில் ரூ.5,000 வந்திருக்கும். எதற்காக இந்த பணம்? திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தேன். இது சாத்தியம் இல்லை என்று சிலர் கூறினர்.
ஆனாலும், நிதி நெருக்கடியைச் சமாளித்து, மத்திய அரசின் ஓரவஞ்சனையையும் மீறி, கடந்த 2023 செப்டம்பர் முதல் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை’ வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறோம். தற்போது 1.31 கோடி குடும்பத் தலைவிகள் இத்திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். இது வெறும் நிதியுதவி அல்ல. சமூகத்தில் பெண்கள் ஆற்றும் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக கொடுக்கப்படும் உரிமைத் தொகை. இந்த தொகையை வைத்து, அன்றாட வீட்டுச் செலவுகள், மருத்துவம், கல்வி என பல அத்தியாவசியச் செலவுகளை மகளிர் தாங்களே நிறைவு செய்ய இத்திட்டம் வழிவகுத்தது. மற்ற மாநிலங்களும் இத்திட்டத்தை பின்பற்றி வருகின்றன.
தொகையை நிறுத்த சூழ்ச்சி: இந்த உரிமைத் தொகையை மேம்படுத்த வேண்டும் என நாம் செயல்பட்டு வந்தால், அதற்கு எதிராக டெல்லியில் இருக்கும் ஒரு கூட்டமும், தமிழகத்தில் அவர்களுக்கு அடிமையாக இருக்கும் இன்னொரு கூட்டமும், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலைக் காரணம் காட்டி, அடுத்த
3 மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த, சூழ்ச்சி செய்வதாக தகவல் வருகிறது. இதுபற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் சிலர் முயற்சி செய்வதாக செய்திகள் வருகின்றன. இந்த திட்டத்தை 3 மாதம் நிறுத்தி வைத்தால், கடினமான கோடைகாலத்தில் கடும் வெயிலில் வேலைக்குச் செல்வதால் உங்களுக்கு எவ்வளவு வலி ஏற்படும் என்பதை என்னால் உணர முடிகிறது.
கோடைகால செலவுகள்: இதை நினைத்துப் பார்த்துதான், இந்த பிப்ரவரி மாதம் மட்டுமின்றி, அடுத்த 2 மாதங்கள், அதாவது மார்ச், ஏப்ரலுக்கான உரிமைத் தொகை தவணைகளை சேர்த்து ரூ.3,000-ம், கூடுதலாக கோடைகாலச் செலவுகளை கருத்தில் கொண்டு மேலும் ரூ.2,000 சிறப்புத் தொகையும் சேர்த்து, இந்த மாதமே ரூ.5,000-ஐ சிறப்பு மகளிர் உரிமைத் தொகையாக 1.31 கோடி பெண்களுக்கு வழங்க உத்தரவிட்டேன்.
இந்த ரூ.5,000-ஐ அடுத்த 3 மாதத்துக்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால், கொஞ்சம் கவனமாக செலவிடுங்கள். முடிந்த அளவுக்கு சேமிக்கவும் பாருங்கள். அடுத்து அமையப் போவதும் திராவிட மாடல் ஆட்சிதான். திராவிட மாடல் 2.0 ஆட்சிக் காலத்தில், மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். முந்தைய அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் அடைய முடியாத பொருளாதார வளர்ச்சியை, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு சாதித்துக் காட்டியவர்கள் நாங்கள். அதனால், எந்த தடை வந்தாலும் அதையெல்லாம் தாண்டி, தமிழகமே வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, முதல்வர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘தமிழக மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத் தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதில் இருந்து பின்வாங்க மாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஏராளமான பெண்கள் அவருக்கு நன்றியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.
