

புதிதாக கட்சியில் சேருகிறவர்களுக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர் அட்டைகளை வழங்குவார்கள். அதுவே, கட்சிக்கு வந்தவர்கள் நாடறிந்த பிரபலங்களாக இருந்தால் தலைமைக் கழகத்துக்கு வரவழைத்து கட்சித் தலைவர் அவருக்கு சால்வை எல்லாம் அணிவித்து உறுப்பினர் அட்டையை வழங்கி போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்.
ஆனால், மதுரையில் விஜய் கட்சியினருக்காக பிரத்யேகமாக வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை சற்றே வித்தியாசமாக வழங்கி இருக்கிறார்கள். மாநகர் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் தங்கபாண்டி, கட்சியில் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார். இவரது ஏற்பாட்டில் தவெக நிர்வாகிகளுக்கு பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில், தவெக தலைவர் விஜய்யின் கட்-அவுட் வைக்கப்பட்டு, அதனிடமிருந்து கட்சி நிர்வாகிகள் தங்களுக்கான அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொண்டனர். விஜய் கையிலிருந்தே அடையாள அட்டைகளைப் பெறுவது போன்ற மகிழ்ச்சியில் இதை அத்தனை பேரும் போட்டோ ஷூட் நடத்தியும் குஷியானார்கள்.
கட்சியினரை உற்சாகப்படுத்தும் விதமாக மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் செய்திருக்கும் இந்த வித்தியாசமான முயற்சியானது மற்ற கட்சிகள் மத்தியிலும் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது.