

மதுரை: மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநரின் உடல் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் 5 இடங்களில் காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள டி.அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ரங்கப்பன் மகன் பாலகிருஷ்ணன் (42). இவர் தேவாரத்தில் இருந்து மதுரைக்கு ஏலக்காய் மற்றும் பார்சல்களை ஏற்றிச் சென்றபோது, வாலாந்தூர் கண்மாய்க்கரை அருகே கடந்த 4-ம் தேதி தீப்பிடித்து எரிந்தது.
இது தொடர்பான விசாரணைக்காக செக்கானூரணி காவல் நிலையத்துக்கு நவ. 13-ம் தேதி அழைத்து வரப்பட்ட பாலகிருஷ்ணன், அடுத்த நாள் (நவ. 14) அதிகாலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தார் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், பாலகிருஷ்ணனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்டது. அந்த அறிக்கையில் பாலகிருஷ்ணனின் உடலில் 5 இடங்களில் காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:கழுத்துப் பகுதியில் கயிற்றுத் தடத்துக்குக் கீழே 3 சிறிய சிராய்ப்புக் காயங்கள் இருந்தன. மண்டை ஓட்டின் அடிப்பகுதி, மேற்பகுதியும் பாதிப்பின்றி இருந்தது. மூளையில் வீக்கம் காணப்பட்டது. ரத்நாளங்களில் ரத்த தேக்கம் இருந்தது. வலது, இடது நுரையீரல்களில் வீக்கம் காணப்பட்டது. பல இடங்களில் சிறிய ரத்த கசிவு புள்ளிகள் இருந்தன.
இதயத்தில் ரத்த கசிவு, ரத்த கட்டிகள் இருந்தன. வயிற்றின் உட்புறச் சவ்வில் ரத்தம் தேங்கி இருந்தது. உடலின் தசைகள், எலும்பு பகுதிகளில் 5 இடங்களில் காயங்கள் இருந்தன. இவற்றின் மூலம் உடனடி இறப்புக்கான இறுதி காரணத்தை தெரிவிக்க முடியாது. வேதியியல் பகுப்பாய்வு, திசு ஆய்வு அறிக்கைகள் கிடைத்த பிறகே இறப்புக்கான காரணம் தெரிய வரும் என தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாலகிருஷ்ணனின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் நேற்று மதியம் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பாலகிருஷ்ணனின் மனைவி, மகன் உள்பட உறவினர்கள் அனைவரையும் போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்துவாகனத்தில் ஏற்றினர்.
போலீஸ் வாகனம், காந்தி அருங்காட்சியகம் அருகே வந்தபோது திடீரென வாகனத்திலிருந்து பாலகிருஷ்ணனின் மகன் விகாஷ் சாலையில் குதித்தார். போலீஸ் வாகனத்தின் அடியில் படுத்த விகாஷ், ‘எனது தந்தையை காவல்துறையினர் அடித்துக் கொன்றுவிட்டனர். என்னையும் கொன்றுவிடுங்கள்’ என்றார். அவரை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீஸார், தனி வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.