

சென்னை: திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது முதல்வர் மற்றும் அமைச்சரை போற்றி அரோகரா முழக்கமிட்ட வர்ணனையாளர்களின் செயலுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது நிகழ்ச்சியை வர்ணனை செய்த தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி, அறங்காவலர் தேர்வுக்குழு உறுப்பினரும் பாடகருமான வேல்முருகன் ஆகியோர் முருகப்பெருமானுடன் தமிழக முதல்வர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோருக்கும் அரோகரா என முழக்கமிட்டனர். அவர்களின் செயலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: கந்தனின் திருப்புகழ் ஓங்கி ஒலிக்க வேண்டிய திருச்செந்தூர் திருத்தலத்தில், கண்டவர்களுக்கெல்லாம் ‘அரோகரா’ முழக்கமிடும் துணிச்சல் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது, எவ்வித ஆன்மிகப் புரிதலோ அல்லது பற்றுதலோ இல்லாத ஒரு சினிமா பிரபலத்தை, இந்து சமய அறநிலையத் துறையின் அறங்காவலர் தேர்வுக் குழு உறுப்பினராக நியமித்தால், அதன் விளைவுகள் இப்படித்தான் இருக்கும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை அவமதிக்கும் விதமாக, கடவுளுக்கு இணையாக முதலமைச்சரையும் அறநிலையத் துறை அமைச்சரையும் துதி பாடிய வர்ணனையாளர்கள் – உணர்வுபூர்வமான இந்நிகழ்வில் பக்தர்களின் மனதை புண்படுத்திய வர்ணனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
திமுக சமூகவலைத்தள பதிவு: முருகன் கோயில் சூரசம்ஹார நிகழ்வை முதல்வருக்கும் அமைச்சருக்கும் அரோகாரா கோஷம் போடப் பயன்படுத்தியது இதுவரை தமிழகம் கண்டிராத மலிவான அரசியல். முதல்வர் விஜய் இந்தத் தவறுக்குப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்க வேண்டும்.
வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை: சூரசம்ஹார விழாவின்போது, அறநிலையத் துறை உறுப்பினர் வேல்முருகன், முதல்வர் விஜய், அமைச்சர் ரமேஷ்க்கு அரோகரா என முழக்கமிட்டது கண்டனத்துக்குரியது. அனைத்து மதத்தினருக்கும் சமமான உரிமை வழங்க வேண்டும். இதற்கு முதல்வர் கண்டனம் தெரிவிப்பதுடன், அறநிலையத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்: ஆன்மிக நிகழ்வில், முருகப்பெருமானுக்கு உரிய பக்தி முழக்கத்தை அரசியல் தலைவர்களின் புகழ்பாடுவதற்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பதவி வழங்கியதற்காக கடவுளோடு ஒப்பிடுவது மிகவும் கண்டனத்திற்குரியது.
பாரத இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் ஆர்.டி.பிரபு: சூரசம்ஹார நிகழ்ச்சியின் போது முதல்வர் மற்றும் அமைச்சரை புகழ்ந்து பாடியிருப்பது கண்டிக்கத்தக்கது மேலும், “கந்தனுக்கு அரோகரா” என பக்தர்கள் முழக்கமிடும் இடத்தில், “முதல்வருக்கு அரோகரா”, “அமைச்சருக்கு அரோகரா’” எனப் பாடியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
போலீஸில் புகார்: இதற்கிடையே, இந்த விவகாரத்தில் பாடகர்கள் வேல்முருகன், புஷ்பவனம் குப்புசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாரத் இந்து முன்னணி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது.