

ஜல்லிக்கட்டு - கோப்புப் படம்
மதுரை; மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடப்பாண்டு நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி தேதிகளை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் அறிவித்தார்.
உலக அளவில் வீர விளையாட்டாக இருக்கக் கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகள், மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பாக நடைபெறும். கடந்த 2025-ம் ஆண்டு மிக சிறப்பாக மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. அதுபோல், நடப்பாண்டும் சிறப்பான முறையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதற்கு இணங்க, 2026-ம் ஆண்டு வரும் 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுபோட்டிகள் நடைபெறுகின்றன. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்படி அனைத்து வழிகாட்டுநெறிமுறைகளையும் பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதற்கான ஆலோசனைக்கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் சித்ரா, மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நீதிமன்றம் அறிவுரைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் விளக்கி கூறப்பட்டது என மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.