வெனிசுலாவில் அடுத்தடுத்து 7 வெடிப்புச் சம்பவங்கள்: தாக்குதலை தொடங்கியதா அமெரிக்கா?

Venezuela’s capital, Caracas attacked?

வெனிசுலா தலைநகர் கராகஸில் நடந்த வெடிப்புச் சம்பவம்

Updated on
2 min read

கராகஸ்: வெனிசுலா தலைநகர் கராகஸில் இன்று (ஜன.3) அதிகாலை 7 இடங்களில் அடுத்தடுத்து வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவை வெனிசுலா ராணுவ தளங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. பயங்கர சத்தத்துடன் கரும்புகை கிளம்பியதால் பொதுமக்கள் அச்சமடைந்ததாகத் தகவல்கள் வருகின்றன. மேலும், அப்பகுதியில் விமானம் ஒன்று தாழப் பறந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அது போர் விமானமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஆனால், இந்த வெடிப்புச் சம்பவங்களுக்கு காரணம் என்னவென்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதலுக்கு ஆயத்தமாகி வருவதாக சொல்லப்பட்ட நிலையில், இந்தத் தாக்குதலை அமெரிக்காவே நடத்தியிருக்கலாம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் கணிக்கின்றன.

இருப்பினும், வெனிசுலா தலைநகரில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவங்கள் குறித்து அந்நாட்டு ராணுவமோ அல்லது அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனோ எதுவும் சொல்லவில்லை.

ட்ரம்ப் எச்சரிக்கையைத் தொடர்ந்து... - முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோவை பதவி விலகுமாறு பலமுறை எச்சரித்து வந்தார். அமெரிக்காவுக்குள் ஃபெண்டானில் போதைப் பொருள் ஊடுருவ வெனிசுலா அதிபரே காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகிறார். அமெரிக்கா மீது வெனிசுலா ‘போதைப் பொருள் பயங்கரவாதம்’ நிகழ்த்துவதாகக் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், வெனிசுலாவுக்கு பொருளாதாரத் தடைகள் விதித்ததோடு, அதன் கடற்பரப்புக்குள் எண்ணெய்க் கப்பல்கள் போக்குவரத்தையும் முடக்கிவைத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் ரோந்து, கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபடுவதோடு, சில போர்க் கப்பல்களும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் இன்று காலை நிகழ்ந்துள்ள வெடிப்புச் சம்பவங்கள் அனைத்தும் அமெரிக்கா மீதான சந்தேகத்தை வலுக்கச் செய்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இத்தனைக்கும், நேற்று வெனிசுலா அரசு அமெரிக்கா முன்வைக்கும் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக விரிவான ஆலோசனைக்கு தயாராக இருப்பதாகவும், அதன் அடிப்படையில் ஒப்பந்தத்தை எட்ட விரும்புவதாகவும் கூட பகிரங்கமாக அறிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.

<div class="paragraphs"><p>வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ</p></div>

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ

‘ட்ரம்ப் எண்ணமே வேறு..’ - இந்த நிலையில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ, ட்ரம்ப் தங்கள் நாட்டை வேறு எண்ணத்தோடு குறிவைக்கிறார். அவருக்கு போதைப் பொருள் தடுப்பு, சட்ட விரோத குடியேறிகளைக் கட்டுப்படுத்துவது ஆகியன வெறும் சாக்கு தான் அவரது இலக்கு வெனிசுலாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே என்றார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை மடுரோவில் ஒரு பேட்டி வெளியானது. அந்த தொலைக்காட்சிப் பேட்டியில் மடுரோ, “ட்ரம்ப் வெனிசுலாவில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் அதன் மூலம் இங்குள்ள எண்ணெய் வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்” என்று வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

Venezuela’s capital, Caracas attacked?
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு எஸ்சிஓ கண்டனம்: ரஷ்யா, சீனாவோடு இணைந்து இந்தியாவும் ஆதரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in