கரூர் கோயில் இனாம் நிலம் பதிவு தடை நீக்கத்துக்கு எதிராக புதிய வழக்கு

அறநிலையத் துறை ஆணையர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
கரூர் கோயில் இனாம் நிலம் பதிவு தடை நீக்கத்துக்கு எதிராக புதிய வழக்கு
Updated on
1 min read

மதுரை: கரூர் கோயில் இனாம் நிலம் பதிவு தடை நீக்கத்துக்கு எதிரான வழக்கில் அறநிலையத் துறை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சேலம் ராதா கிருஷ்ணன், மயிலாப்பூர் டி.ஆர்.ரமேஷ், கூடுவாஞ்சேரி பாஸ்கர் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுக்களி, “கரூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில், ரவீஸ்வரர் சுவாமி திருக்கோயில், குப்புச்சிபாளையம் விக்ருதீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலங்கள் 15 கிராமங்களில் உள்ளன.

இதில் 3,390 தனி நபர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டது. பின்னர் இந்த நிலங்களை பத்திரப் பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சுமார் 3,085 ஏக்கர் பட்டா நிலங்களுக்கு பத்திரப் பதிவுக்கான விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோயில் நிலங்களை பட்டா மாறுதல் தனிநபர் பத்திரப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால், கோவில் நிலங்கள் அனைத்தும் பறிபோக கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசாணையை ரத்து செய்தும், அதுவரை பத்திரப் பதிவுக்கு தடை விதித்தும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று அந்த மனுக்களில் கூறியிருந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், “கடந்த சில வாரங்களுக்கு முன்பு இது தொடர்பான வழக்கில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் புதிதாக 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்ககளுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டது

அரசுத் தரப்பு வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், கரூர் கோயில் நிலம் தொடர்பான பொதுநல மனுக்களில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், கரூர் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

கரூர் கோயில் இனாம் நிலம் பதிவு தடை நீக்கத்துக்கு எதிராக புதிய வழக்கு
‘அண்ணாமலை பல்கலை. நிலத்தை விற்கச் சொல்வதா?’ - தமிமுன் அன்சாரிக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in