

படம்: நா.தங்கரத்தினம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு மாநகராட்சி மேற்கொண்ட செலவு தொகையில் 50 சதவீதத்தை இந்து அறநிலையத்துறையிடம் கேட்டுப் பெற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
ஆண்டுதோறும் மீனாட்சி அம்மன் கோயில், அழகர்கோவில் சித்திரைத் திருவிழாக்களின்போது பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மாநகராட்சி மேற்கொள்ளும். இந்த விழா 10 நாட்கள் நடைபெற்றாலும் விழா முன்னேற்பாடுகளையும் சேர்த்து 20 நாட்கள் வரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகள், வைகை ஆறு, கள்ளழகர் வந்து செல்லும் சாலைகள், மண்டபங் கள் என மாநகர் முழுவதும் பக்தர்களுக்கான குடிநீர், சாலை, தெருவிளக்கு மற்றும் சுகாதார வசதிகளை மாநகராட்சியே ஏற்பாடு செய்யும்.
விழா முடிந்த பிறகு, மாநகராட்சி மேற்கொண்ட செலவினத்தில் அரசு ஆணைப்படி 50 சதவீதம் பணத்தை இந்து சமய அறநிலையத்துறையிடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த காலத்தில் ஆணையர்களாக இருந்த கார்த்திகேயன், சித்ரா, சித்திரை திருவிழா ஏற்பாடு களுக்கு மாநகராட்சி செலவிட்ட பணத்தை இவ்வாறு பெற்றுள்ளனர்.
அதுபோல், செப்.17-ம் தேதி நடந்த மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகளுக்கு மாநகராட்சி மேற்கொண்ட செலவுத் தொகையை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்தாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது : குட முழுக்கு விழாவுக்கு 50 லட்சம் பக்தர்கள் வருவர் எனத் திட்டமிட்டு மாநகராட்சி விழா ஏற்பாடுகளை மேற்கொண்டது. கோயிலைச் சுற்றி மட்டுமில்லாது ரயில் நிலையம், பெரியார் நிலையம், நேதாஜி ரோடு, மாசி வீதிகள், சிம்மக்கல், சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் 24 நிரந்தர கழிப்பறைகள், 28 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப் பட்டன. குடிநீருக்காக 16 குடிநீர் தொட்டிகள், 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 203 சின்டெக்ஸ் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
தெரு விளக்குகள் அனைத்தும், ஒளியின் அளவை அதிகரிக்க 40 வாட்ஸ் ஆக மாற்றப்பட்டன. சாலை சீரமைப்பு, மருத்துவ முகாம்கள்,தூய்மைப் பணி, கோயிலைச் சுற்றி 74 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
கடந்த காலத்தில், மாநகராட்சி தாங்கள் செய்ய வேண்டிய பணிகளை மட்டுமே மேற்கொண்டது. ஆனால், இந்த முறை காவல்துறை, இந்து அறநிலையத்துறை செய்ய வேண்டிய பணிகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற் கொண்டதால் மாநகராட்சி செலவு ரூ.1.5 கோடியை தொடும் என்கின்றனர். 10 நாள் சித்திரை திருவிழாவுக்கு ரூ.98 லட்சம் ரூபாய் செலவிட திட்டமிட்டு, ரூ.50 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டது. ஆனால், தற்போது ஒரு நாள் திருவிழாவுக்கே ரூ.2 கோடிவரை செலவழிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி செலவு செய்த தொகையைப் பெற ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள அரசாணைப்படி நடவடிக்கை எடுக்கலாம். இந்து சமய அறநிலையத் துறையிடம் பெறுவது குறித்து ஆணையர்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த தொகையை மாநகராட்சியே ஏற்க வேண்டுமெனில் மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஏற்கெனவே மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம், கவுன்சிலர்களுக்கு சரியான மரியாதை, கவுரவம் வழங்குவதில்லை, சம்பிர தாயத்துக்கு அழைப்பிதழ் வழங்கி 2 பாஸ் மட்டுமே வழங்கியதாக மனக் குமுறலுடன் உள்ளனர். அவர்கள், மாநகராட்சி செலவிட்ட தொகையை நிர்வாகம் ஏற்க அனுமதிப்பது சந்தேகமே" என்று கூறினர்.