மதுரை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தவறான அறிவிப்பாணையால் வேலை இழந்த பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் ராஜபிரியா. இவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வந்தேன்.
கடந்த 2022-ல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர், உதவியாளர்களாக பணிபுரிந்து வருபவர்கள், தமிழ்நாடு தலைமை செயலகத்தில் உதவி பிரிவு அலுவலர்/உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
நான் உதவி பிரிவு அலுவலர் பணிக்கு விண்ணப்பித்தேன். பின்னர், நீர்வளத் துறையில் பணியில் சேர்ந்து தலைமைச் செயலகப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டேன். இந்நிலையில், நான் உதவி பிரிவு அலுவலராக தேர்வு செய்யப்பட்டது தமிழ்நாடு தலைமைச் செயலக பணி விதிகளின் அடிப்படையில் நடைபெறவில்லை என்றும், அதனால் என் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் உத்தரவிடப்பட்டது.
அப்போது என்னிடம் விளக்கம் கேட்கவில்லை. பின்னர், அரசு உதவிபெறும் பள்ளிகளில் இளநிலை உதவியாளர்களாக பணிபுரிபவர்கள் தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர்களாக கருதப்பட மாட்டார்கள். அந்த அடிப்படையில் என் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது.
இதை ரத்து செய்து, என்னை நீர்வளத் துறையில் உதவி பிரிவு அலுவலராக பணியில் சேர்த்து, அனைத்து பணப் பலன்களையும் வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி கே.குமரேஷ்பாபு விசாரித்தார். டிஎன்பிஎஸ்சி சார்பில், “மனுதாரர் தனியார் பள்ளி அமைச்சுப்பணியாளர். அவரை தமிழ்நாடு அமைச்சுப் பணி விதிகளின் அடிப்படையில் அரசு ஊழியராக கருத முடியாது. தலைமைச் செயலகப் பணிக்கு தமிழ்நாடு அமைச்சுப் பணி விதிகள் அல்லது தமிழ்நாடு ஜுடிசியல் பணி விதிகளின் கீழ் வருபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்’’ என்று கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணையில் குறைபாடு இருந்துள்ளது. இந்தக் குறைபாட்டால் மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளார். இதில் மனுதாரர் மீது எந்த தவறும் இல்லை.
மனுதாரர் உதவி பிரிவு அலுவலர் பணிக்குரிய தகுதி பெற்றிருந்தாலும், தலைமைச் செயலக பணி விதிகளைப் பூர்த்தி செய்யாததால் அவரைப் பணியில் தொடர உத்தரவிட முடியாது. இந்த வழக்கில் மனுதாரருக்கு நீதிமன்றம் அனுதாபம் மட்டுமே தெரிவிக்க முடியும்.
எனினும், மனுதாரர் உதவி பிரிவு அலுவலர் பணிக்காக கல்வித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட இளநிலை உதவியாளர் பணியைத் துறந்துள்ளார்.
மனுதாரருக்கு டிஎன்பிஎஸ்சி ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். எதிர்காலத்தில் தவறாக அறிவிப்பாணை வெளியிட வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சியை நீதிமன்றம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.