

காவ்யா, அஜித்குமார்
தஞ்சாவூா்: தஞ்சாவூர் அருகே பள்ளி ஆசிரியையை கத்தியால் குத்திக் கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் அருகேயுள்ள மாரியம்மன் கோயில் மேலகளக்குடியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்.
இவரது மகள் காவ்யா (26). இவர், ஆலங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக நடன ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அதே ஊரைச் சேர்ந்த கருணாநிதி மகன் அஜித்குமார்(29). பெயின்டர். ஒரே சமூகத்தைச் சேர்ந்த காவ்யாவும், அஜித்குமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இது காவ்யாவின் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை, இதனால், காவ்யாவை அவரது பெற்றோர் வற்புறுத்தி, உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்துவைப்பதற்காக சில நாட்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இந்த விவரத்தை அஜித்குமாருக்கு தெரிவிக்காமல், அவருடன் காவ்யா தொடர்ந்து பழகி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு அஜித்குமாருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த காவ்யா, தனக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட தகவலைக் கூறி உள்ளார். மேலும், நிச்சயதார்த்த புகைப்படங்களையும் அஜித்குமாருக்கு அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அஜித்குமார், காவ்யா மீது கோபம் அடைந்துள்ளார்.
இந்நிலையில், காவ்யா வழக்கம்போல நேற்று காலை பள்ளிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மாரியம்மன் கோயில் கொத்தட்டை காலனி ராமகிருஷ்ண மடம் அருகே சென்றபோது, காவ்யாவின் வாகனத்தை அஜித்குமார் வழிமறித்துள்ளார்.
பின்னர், நிச்சயதார்த்தம் செய்யப்பட்டதை ஏன் முன்னரே கூறவில்லை என்று கூறி காவ்யாவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவ்யாவை அஜித்குமார் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த காவ்யா அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த அம்மாபேட்டை போலீஸார், காவ்யாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அஜித்குமாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
தலைவர்கள் கண்டனம்: தஞ்சையில் ஆசிரியை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பாமக தலைவர் அன்புமணி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில், “தஞ்சாவூரில் பள்ளிக்குச் செல்லும் வழியில் பெண் ஆசிரியை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள தகவல் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் மாணவிகள், பெண்கள், முதியவர்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்டது. போலீஸார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.