

மதுரை: பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்து, அவற்றின் மூலம் பணம் பறிக்கும் செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
காரைக்குடியை சேர்ந்த பூல்பாண்டி என்பவர், காரைக்குடி நகராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி, 2021-ம் ஆண்டில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "பொதுநல மனுகளை தாக்கல் செய்து, அதன் மூலம் பணம் பறிக்கும் நிலை உள்ளது. பணம் கிடைத்தவுடன் பொதுநல மனு திரும்பப் பெறப்படுகிறது. இது ஏற்கத்தக்கதல்ல. மேலும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயலாகும்.
எனவே, இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. பொதுநல மனுவை சிலரின் தனிப்பட்ட நோக்கங்களை பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்துவது நீதிமன்றத்துக்கு வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
இதுபோன்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்கக் கூடாது. அரசு அலுவலர்களும் இதில் நோட்டீஸ்கூட அனுப்பாமல் இருந்தது ஏற்கத்தக்கதல்ல. தற்போதுதான் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பொதுநல மனு தாக்கல் செய்பவர்கள் முறையான காரணம் இல்லாமல் மனுவை திரும்பப் பெற அனுமதி கோரினால், அதிக அபராதம் விதிக்கப்படும். மனுதாரர் வரும் 9-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.