

படங்கள்: நா.தங்கரத்தினம்
மதுரை: தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ‘அவனியாபுரம் ஜல்லிக்கட்டு’ இன்று (ஜன.15) காலை 7 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. சுமார் 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் இதில் களம் கண்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரவீன், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயா, காவல் ஆணையர் லோகநாதன், ராஜன் செல்லப்பா எம்எல்ஏ முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதைத்தொடர்ந்து போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் பிரவீன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
படம்: நா.தங்கரத்தினம்
அவனியாபுரத்தில் உள்ள பல்வேறு கோயில்களின் காளைகள் முதலாவதாக அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
ஒவ்வொரு சுற்றிலும் 100 காளை அவிழ்க்க இலக்கு நிர்ணயத்து மொத்தம் 12 சுற்றுகளாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் 5 சுற்று முடிவில் 500 காளைகள் அவிழ்க்கபட்டன. வாடிவாசலில் துள்ளி பாய்ந்த காளைகளின் திமில் பிடித்து அடக்கிய வீரர்களுக்கு தங்க காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
படம்: நா.தங்கரத்தினம்
இம்முறை மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றிலும் எத்தனை காளைகள் அடக்கினர் என்ற விவரம் டிஜிட்டல் திரை மூலம் ஒளிபரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியை மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பார்க்கின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் கண்டுகளிக்கின்றனர்.
ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் உள்பட முக்கிய பிரமுகர்களின் காளைகளும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன.
படம்: நா.தங்கரத்தினம்
படம்: நா.தங்கரத்தினம்
தயார் நிலையில் மருத்துவக் குழுவினர்: ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் 12, பைக் ஆம்புலன்ஸ்கள் 2, மருத்துவ பணியாளர்கள் 40 பேர் என மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
களத்தில் வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அருகில் உள்ள அரசு சிறப்பு முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மேல் சிகிச்சை தேவைப்படும்பட்சத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
படம்: நா.தங்கரத்தினம்
காயமடையும் காளை மாடுகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வகையில் கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.