

மதுரையில் நடந்த சர்வதேச விமான நிலைய விழாவில் மத்திய அமைச்சர் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு பேசினார். அருகில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர்.
மதுரை: மதுரை சர்வதேச விமான நிலைய அந்தஸ்தை பெற்றுள்ளதால் இந்நகரின் வலிமை இனி உலகுக்கு தெரியும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு நம்பிக்கை தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தை முறைப்படி சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு, கூடுதல் விமானங்களை பாதுகாப்பாக இயக்கும் வகையில் புதிய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தையும் அமைச்சர் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியது: தமிழகத்தின் 3-வது பெரிய நகரம் மதுரை. இது தமிழத்தின் நுழைவாயில் மட்டுமல்ல, உண்மையான இந்திய கலாச்சாரம், ஆன்மாவையும் சுமந்து நிற்கும் ஒருநகரம். இந்தியாவின் பல்வேறு பகுதிகள், உலகின் பல பகுதிகளில் இருந்து மக்கள் மதுரைக்கு வருகின்றனர். மதுரை தமிழகத்தின் கலாச்சார தலைநகரம், ஆன்மிக மையம், மேலும் தொழில், கல்வி மையமாகவும் வளர்கிறது.
இதனால் மதுரைக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. வளர்ச்சி என்பது பயணிகள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்தில் இருந்து தொடங்குகிறது. மதுரையை நாட்டின் பிற பகுதிகளுடனும், உலகத்துடனும் இணைக்கும் போதுதான் வர்த்தகம் தொடங்குவதுடன் முதலீடுகளும் வரும்.
பவ்வேறு மேம்பாட்டு நோக்கத்துடன்தான் சுமார் 30 ஆண்டுகால கோரிக்கையை தற்போதுநிறைவேற்றி உள்ளோம். ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பேசும்போது 1991-ம் ஆண்டிலேயே மக்களவையில் மதுரை சர்வதேச விமான நிலையத்துக்காக குரல் கொடுத்ததாகப் பகிர்ந்தார். இதில் ஒருவர், இருவருக்கு மட்டுமல்லாமல் அனைவரின் பங்களிப்பும் உள்ளது. அதற்கும் மேலாக பிரதமர் மோடியின் தமிழகம் மீதான அன்பும் அக்கறையாலேயே தற்போது இது சாத்தியமாகி உள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மக்களவை உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), திருப்பரங்குன்றம் எம்எல்ஏ வி.வி.ராஜன் செல்லப்பா, மத்திய விமான போக்குவரத்து துறை இணை இயக்குநர் விபின்குமார், மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
விமான நிலையத்துக்கு புதிதாக மாற்றப்பட்டுள்ள பெயர் பலகை. படங்கள்: நா.தங்கரத்தினம்.
'மக்களவையில் நன்றி தெரிவிப்போம்' - மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேசும்போது, சர்வதேச அந்தஸ்து மதுரை விமான நிலையத்துக்கு கிடைத்தது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. இதற்கு விடாமல் மக்களவையில் குரல் கொடுத்த முன்னாள் எம்.பி.க்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நிச்சயமாக இந்த பணியை ஆற்றியதற்காக மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சருக்கு மக்களவையில் எங்களது பாராட்டுகளை நிச்சயம் தெரிவிப்போம். அவருக்கும், பல முயற்சிகள் செய்த தமிழக அரசுக்கும் மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.