

மதுரை: தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குக் கனிமங்களைக் கொண்டு செல்வதற்கான தடையை நீக்கக் கோரிய வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
குமரி மாவட்டம் லிபின் பொன்னுசுவாமி லீலா, தேனி மாவட்டம் அருண் அரவிந்த் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்குத் தடை விதித்து கனிம வளத்துறை இயக்குநர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் தண்டபாணி,திலீப் குமார் அமர்வில் நேற்று விசாரணைக்குவந்தன. அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் இதுபோன்ற வழக்கு நிலுவையில் உள்ளது எனக் கூறப்பட்டது. மனுதாரர் தரப்பில், இந்தவழக்கு மதுரை அமர்விலேயே விசாரித்து உத்தரவு பிறப்பிக்க கோரப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இந்த மனுக்களை தலைமை நீதிபதிக்கு பதிவுத்துறை அனுப்ப வேண்டும். மனுக்களை எங்கு விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என உத்தரவிட்டனர்.