

சென்னை: தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியது தொடர்பான வழக்கில், திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘‘சட்டப்பேரவையில் சபாநாயருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் போது ஆதரவாக வாக்களித்தால், ரூ.35 கோடி தருவதாகக் கூறி முக்கியக் கட்சியின் சார்பில் சிலர் குதிரை பேரத்தில் ஈடுபட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் மிரட்டல் விடுத்தனர்’’ என்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜூன் 29-ம் தேதி திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக 9 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் உட்பட மேலும் 20-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் நேற்று மாலை நடந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ‘‘இந்த வழக்கில் முழுக்க முழுக்க அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரூ.35 கோடி தருவதாகக் கூறி குதிரை பேரம் நடத்தியதற்கான தொலைபேசி உரையாடல் பதிவுகள் இல்லை. கரூரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுகவுக்காகச் செந்தில் பாலாஜி பணியாற்றுவதைத் தடுக்கும் நோக்கில் ஆளும் கட்சியினரின் தூண்டுதலோடு போலீஸார் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர். செந்தில் பாலாஜி எங்கும் ஓடி ஒளியப் போவதில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறார்’’ என்றார்.
அசோக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமரேசன், ‘‘இந்த வழக்கில் எந்தப் பணமும் கைமாறவில்லை. எப்போதெல்லாம் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குப் பதியப்படுகிறதோ அந்த வழக்குகளில் அசோக் குமாரையும் சேர்த்து விடுகின்றனர். இது திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட வழக்கு’’ என்று வாதிட்டார்.
போலீஸ் தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் வாதாடியாவது:
தவெக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அசோக் குமாரும், கைது செய்யப்பட்டவர்களும் பல முறை சந்தித்து சதித் திட்டம் தீட்டியுள்ளனர். இதில் ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. கைதானவர்களுக்கும் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாருக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.
ஊத்தங்கரை எம்எல்ஏ மட்டுமின்றி மேலும் 10 எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தியுள்ளனர். இதற்காக ஒரு தனியார் நிறுவனத்திடம் பல கோடி ரூபாய் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு முக்கிய பங்கு உள்ளது. தேடப்படும் முக்கிய நபரான லட்சுமணப் பெருமாள் என்பவர் சிங்கப்பூரில் தலைமறைவாக உள்ளார். ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நடந்துள்ள இந்த சதித் திட்டத்துக்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.
செந்தில் பாலாஜிக்கும், அசோக் குமாருக்கும் இதில் தொடர்பு இல்லை என்றால் விசாரணைக்கு நேரில் ஆஜராகி இருக்கலாமே? இந்த வழக்கின் குற்றச்சாட்டு தீவிரமானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களை கோடி, கோடியாக பண ஆசை காட்டி விலைக்கு வாங்க முற்பட்டுள்ளனர். புலன் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுதாரர்கள் செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இருவரும் காலை, மாலை என இரு வேளைகளிலும் விசாரணை அதிகாரி முன்பாக ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.