ஆர்எஸ்எஸ் ஊர்வலம் காஷ்மீரில் அனுமதிக்கப்படும் போது தமிழகத்தில் மறுப்பு ஏன்? - ஐகோர்ட்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: ‘தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் ஜம்மு காஷ்மீரில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்படும்போது, அமைதிப் பூங்கா என சொல்லப்படும் தமிழகத்தில் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது?’ என தமிழக காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநில செயலாளர் ஜெகதீசன் தாக்கல் செய்த மனுவில், ‘ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவன நாளை முன்னிட்டு, அக்டோபர் 18 அல்லது 25-ம் தேதி அல்லது நவம்பர் ஒன்றாம் தேதியில் தமிழ்நாடு முழுவதும் ஊர்வலம் நடத்த அனுமதிக் கோரி டிஜிபி-யிடம் விண்ணப்பிக்கப்பட்டது. அந்த விண்ணப்பம் தொடர்பாக எந்த பதிலும் கிடைக்காததால் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, “ஒவ்வொரு ஆண்டும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

காவல் துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “அனுமதி கோரி 21 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டுமென்ற விதி இருக்கும் நிலையில், அக்.3-ம் தேதி தான் விண்ணப்பிக்கப்பட்டது” என்று கூறினார்.

மேலும், ஊர்வலத்துக்கு அனுமதி கேட்கும் வழித்தடம் அனுமதி அளிக்க முடியாத பகுதி எனவும், விழா காலத்தில் அனுமதி அளித்தால் பொது மக்களுக்கு அசவுகரியம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி, “ஒவ்வொரு ஆண்டும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், “எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் தவெக ஆட்சியில் திராவிடர் கழகம், திமுக, அதிமுக, ஆர்எஸ்எஸ் என அனைவருக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.

அத்துடன், “தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் ஜம்மு காஷ்மீரிலேயே ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்படும்போதும், அமைதி பூங்கா என சொல்லப்படும் தமிழகத்தில் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது?” என நீதிபதி கேள்வி எழுப்பி, அனுமதியை மறுத்து தேவையற்ற விளம்பரத்தை அரசு ஏற்படுத்தி தருவதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யனுடன் பேச்சுவார்த்தை நடத்த, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நாளைய (அக்.15) தினத்துக்கு ஒத்திவைத்தார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“அநியாய விலைக்கு மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்” - பெ.சண்முகம் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in