குடிமக்களை பாதுகாப்பது அரசனின் உயரிய கடமை - 'மனுஸ்மிருதி'யை சுட்டிக்காட்டி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு

குடிமக்களை பாதுகாப்பது  அரசனின் உயரிய கடமை - 'மனுஸ்மிருதி'யை சுட்டிக்காட்டி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்கு சட்ட உதவிகளை வழங்குவதற்கான கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மலர்விழி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: என் கணவர் மாரிமுத்து மத்திய ஆப்பிரிக்காவுக்கு 2021-ம் ஆண்டு தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். அங்கு எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.என் கணவர் இறப்புக்கு கேமரூன் நாட்டுத் தொழிற்சாலை இந்திய மதிப்பில் 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தது. இந்த இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடித்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், “மன்னன் என்பவன் மக்களை மகிழ்ச்சியாகவும் வளமாகவும் வைத்திருக்க வேண்டும். மகாபாரதத்தில் வருமானத்தில் 6-ல் ஒரு பங்கைப் பெற்றாலும் மக்களைப் பாதுகாக்கத் தவறிய மன்னன் பாவியாகிறான்” என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது இங்கு மன்னனாக இருப்பது அரசுகள். அரசாங்கம் மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டும் என மனு சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேதான் புத்த மதத்திலும் குறிப்பிடப்படுகிறது. அரசாங்கம் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டு பணப் பரிமாற்றங்கள் மூலம் பெரும் அந்நியச் செலாவணியை ஈட்டுகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து அரசுகள் நன்மைகளைப் பெறும்போது, வெளிநாட்டு வேலைவாய்ப்பால் ஏற்படும் பிரச்சினைகள் எழும்போது அவர்களை மீட்க விரைந்து செயல்பட்டு உரிய இழப்பீடு கொடுப்பதும் கடமையாகும். எனவே தற்போதுள்ள கால சூழலுக்கு ஏற்ப சட்டங்களில் சில திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

தனது குடிமக்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு கொள்கை சார்ந்த சட்ட திட்டத்தை வகுக்க வேண்டும். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டுள்ள மனுதாரர் ஏழையாக உள்ளார். எனவே அவர் வாழ்வாதாரம் பாதுகாக்க பட வேண்டும். இதற்காக மத்திய அரசு சட்டப் போராட்டத்தையும் நடத்த தயாராக இருக்க வேண்டும். இழப்பீடு வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய தூதரகம் எடுக்க வேண்டும்.” என உத்தரவிட்டார்.

குடிமக்களை பாதுகாப்பது  அரசனின் உயரிய கடமை - 'மனுஸ்மிருதி'யை சுட்டிக்காட்டி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு
“பாமகவை கைப்பற்ற அன்புமணி பம்மாத்து” - அடுக்கடுக்காக வசைபாடிய ராமதாஸ்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in