“பாமகவை கைப்பற்ற அன்புமணி பம்மாத்து” - அடுக்கடுக்காக வசைபாடிய ராமதாஸ்!

“பாமகவை கைப்பற்ற அன்புமணி பம்மாத்து” - அடுக்கடுக்காக வசைபாடிய ராமதாஸ்!
Updated on
1 min read

சென்னை: “எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது. கட்சியைக் கைப்பற்ற பம்மாத்து வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடந்தது. பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அன்புமணி பாமகவின் தலைவர் அல்ல, அவருக்கு சின்னமும் ஒதுக்கப்படவில்லை என்று நாங்கள் தொடுத்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றமும், இந்திய தேர்தல் ஆணையமும் உறுதிப்படுத்தியுள்ளது.

பல மாதங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி, கட்சியின் சின்னத்தை பெயரை பயன்படுத்தக் கூடாது. என் பெயரையும் அவரும், அவர் தரப்பினரும் பயன்படுத்தக் கூடாது. இதை சொல்லுகிறவன் இந்த கட்சியை உருவாக்கிய நான்.

ஆனால், அன்புமணியும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து அதிகளவில் ஆயிரக்கணக்கான பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். கட்சியைக் கைப்பற்ற பம்மாத்து வேலைகளை அன்புமணி தொடர்ந்து செய்து வருகிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். அவருக்கு பல்வேறு பதவிகளை கொடுத்து அழகு பார்த்தேன். தீட்டிய மரத்திலேயே கூர் பாய்ச்சியதைப்போல் பாமக என்னும் ஆலமரத்தின் கிளையை வெட்ட ஆரம்பித்திருக்கிறார். இதனுடைய பலன் கீழே விழுவதை தவிர எதுவும் இல்லை .

தமிழகம் முழுவதும் 96,000 கிராமங்களுக்கு சென்று ஆலமரம் போல வளர்ந்த கட்சிதான் பாமக. எனக்கு கூட்டணி குறித்து பேச இந்த நிர்வாகக் குழு முழு உரிமையும் வழங்கியுள்ளது.

அவர், அன்புமணி ராமதாஸ் அல்ல; அன்புமணி மட்டுமே. அவரை பாமகவில் இருந்து நீக்கிவிட்டேன், இருப்பினும் அவர், வேட்புமனுக்களை வாங்கி வருகிறார். டெல்லி தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும் மீறி அன்புமணி செயல்பட்டு வருகிறார். தவறான புள்ளி விவரங்களை கொடுத்து தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றி இருக்கிறார்கள். நிச்சயம் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன்.” என்றார்.

“பாமகவை கைப்பற்ற அன்புமணி பம்மாத்து” - அடுக்கடுக்காக வசைபாடிய ராமதாஸ்!
ஊரக வேலை உறுதி திட்ட மசோதா தாக்கல்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in