

சென்னை: “சென்னை மாநகராட்சியில் ஒரு சில இடங்களில் நூற்றுக்கு நூறு சதவீதமும், ஒரு சில இடங்களில் நூற்றுக்கு 300 சதவீதம் அளவுக்கு சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைக் குறைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து, முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாகவே சென்னையில் மக்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிற ஒரு செய்தி சொத்து வரி உயர்வு. சென்னை மாநகராட்சியின் சார்பில் சொத்து வரியினை எப்போதாவது ஒருமுறை உயர்த்துவது என்பது வாடிக்கைதான்.
ஆனால், இந்த அளவுக்கு மக்கள் தலையில் பேரிடியாக அது இருக்காது. ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் மதிப்பீட்டில் இருந்து ஐந்து அல்லது பத்து சதவீதம் உயர்வு என்பது இருக்கத்தான் செய்யும்.
ஆனால், தற்போதைய உயர்வு என்பது ஒரு சில இடங்களில் நூற்றுக்கு நூறு சதவீதமும், ஒரு சில இடங்களில் நூற்றுக்கு 300 சதவீதம் அளவுக்கு சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.
எந்த ஒரு முன்னறிவிப்பு இன்றி இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற வகையில் சொத்து வரி உயர்த்தி இருப்பது என்பது மக்களுக்கு மிகப் பெரிய இன்னலை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலை எப்படி உருவானது என்ற காரணம் கேட்டால் அரசு தரப்பில் ஒரு வகையான பதில் தரப்படுகிறது. அதாவது, வரி மதிப்பீடுகள் என்பது பரப்பளவை விட குறைவாக மதிப்பிடப்பட்ட குடியிருப்புகள் மாநகராட்சி அலுவலர்களால் கண்டறியப்பட்டு அதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு இந்த வரிகள் கூடுதலாக்கப்பட்டுள்ளது என்றும், குடியிருப்பு வகைப்பாட்டில் சொத்து வரி செலுத்தி விட்டு அதனை வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகிற உரிமையாளர்களுக்கு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பு கூறுகிறது.
ஆட்சிக்கு வந்து மூன்று மாத காலத்தில் இதை இவர்கள் எப்படி கண்டறிந்திருக்கக்கூடும் என்பது பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ள ஒரு கேள்வி.
ஏற்கெனவே மின்சார கட்டணம் பல மடங்கு உயர்ந்த நிலையில் சொத்து வரி உயர்த்தியிருப்பது என்பது ஏற்புடையதாக இல்லை என்று பொதுமக்கள் இதற்கு தங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.
சொத்து வரி உயர்த்த வேண்டும் என்று சொன்னால் அதற்கென்று முறையான வழிமுறைகள் இருக்கிறது. வழக்கமாக மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு இந்த சொத்து வரி உயர்வு என்பது முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இது மன்ற கூட்டத்தில் வைக்கப்படாமல் சர்வாதிகாரமான முறையில் அறிவிக்கப்பட்டு இருப்பது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும், பல்வேறு துறைகளில் கவனம் செலுத்த வேண்டிய முதல்வர் தனது நேரடி கட்டுப்பாட்டில் இந்தத் துறையை வைத்திருப்பதால்தான் சிக்கல் எழுகிறது. இதற்கென்று ஒரு அமைச்சரை நியமித்து அவர் மூலம் இத்தகைய நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ள வேண்டும்.
எது எப்படியோ ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கிறபோது மக்களுக்கான நலத்திட்டங்களை எல்லாம் நிறைவேற்றுவதற்கு வழி இல்லாத ஓர் அரசு மக்கள் மீது மேலும் சுமைகளை வைப்பது என்பது ஒரு மோசமான நடைமுறையாக இருக்கும்.
எனவே, சொத்து வரி உயர்வு குறித்து பரிசீலித்து முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.