

சென்னை: மாநகராட்சியில் சொத்து வரி 10 மடங்குக்கு மேல் உயர்ந்ததாக சொத்து உரிமையாளர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், மாநகராட்சி வட்டார துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்து தீர்வைப் பெறலாம் என மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சுய-அறிவிப்பு (Self-Declaration) நடவடிக்கையின்போது, சொத்து உரிமையாளர்கள் தங்கள் சொத்துகளின் பயன்பாடு மற்றும் கட்டிடப் பரப்பு குறித்த விவரங்களை வழங்கியதன் அடிப்படையில், சொத்துவரி மதிப்பீட்டில் திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கரோனா பெருந்தொற்று காரணமாக மறுமதிப்பீடு செய்யும் பணிகள் கைவிடப்பட்டது. சொத்து உரிமையாளர்கள் வழங்கிய விவரங்கள் மற்றும் கிடைக்கப்பெற்ற மறுஅளவீடு, புவிசார் தகவல் அமைப்பு, செயற்கைக்கோள் படத் தரவுகளின் அடிப்படையில் சொத்து வரி மதிப்பீடுகளைத் திருத்தும் பணியை தற்போது மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
அதனடிப்படையில் சொத்து வரி மதிப்பீடானது, சொத்தின் சரியான பயன்பாடு மற்றும் கட்டிட பரப்பளவை உறுதி செய்வதற்கும், அனைத்து சொத்துகளிலும் நியாயமான மற்றும் சரியான மதிப்பீட்டை உறுதி செய்வதற்கும் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சொத்து உரிமையாளர்களுக்கு ஏற்படும் நிதிச் சுமையை குறைக்கும் முகமாக, கட்டிடமானது கட்டப்பட்ட காலத்தை கருத்தில் கொள்ளாமல் சொத்துவரி மறுமதிப்பீடு கணக்கீடு 2025-26 ஆண்டின் 2-ம் அரையாண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதற்கிடையில் மாநகராட்சியின் துல்லிய மதிப்பீடு காரணமாக சொத்து உரிமையாளர்களுக்கு இதற்கு முன்பு செலுத்தி வந்ததை விட பல மடங்கு சொத்துவரி அதிகரித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.சண்முகம் கூறும்போது, “வட சென்னையில் ஒரு சொத்தின் உரிமையாளர் இதுவரை அரையாண்டுக்கு ரூ.295 செலுத்தி வந்தார்.
இப்போது ரூ.3255 ஆக உயர்த்தி மாநகராட்சி கடிதம் அனுப்பியுள்ளது. இதை கடந்த நிதியாண்டின் 2-ம் அரையாண்டு முதல் செலுத்த வேண்டும் என கூறியுள்ளது.
இதன்படி, கடந்த நிதியாண்டின் 2-ம் அரையாண்டு, நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு, அக்டோபரில் 2-ம் அரையாண்டு என ஒரு பெரிய தொகையை ஒரு நடுத்தர சொத்து உரிமையாளரால் எப்படி செலுத்த முடியும்.
இந்த சொத்து வரி உயர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை” என்றார். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சியில், ஏற்கெனவே குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் சொத்துவரி செலுத்தி வருபவர்களுக்கு உரிய தரவுகளின் அடிப்படையில், திருத்திய மதிப்பீடு செய்து அறிவிப்பு வழங்கப்பட்டவர்கள், அதன் மீது ஆட்சேபனை இருப்பின் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையருக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். எனவே மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக வரும் உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.