

சென்னை: இலவச மடிக்கணினி திட்டத்தை விமர்சிப்பது அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் மாணவர் விரோத மனநிலையை காட்டுவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதுடன், அவர்களது கணினி பயன்பாட்டு திறனையும், படைப்பாக்க திறனையும் மேம்படுத்துகிறது.
குறிப்பாக, ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மடிக்கணினி பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இத்திட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்திருப்பது, அவரது மாணவர் விரோத மனநிலையையே காட்டுகிறது. இது கண்டனத்துக்குரியது.