

சென்னை: ‘நீட் தேர்வு தனது அனைத்து வாக்குறுதிகளிலும் முற்றிலுமாகத் தோற்றுவிட்டது. கூட்டாட்சித் தத்துவத்தை மதித்து மருத்துவ மாணவர் சேர்க்கை அதிகாரத்தை மாநிலங்களிடமே ஒப்படைக்க வேண்டும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு முழுவதும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் வெறும் ஒரு தேர்வின் நம்பகத்தன்மை சீர்குலைந்ததற்கான எதிர்வினை மட்டுமல்ல; தகுதி அடிப்படையிலானது என முன்னிறுத்தப்பட்ட ஓர் அமைப்பின் மீதான ஆழமான நம்பிக்கையிழப்பையே வெளிப்படுத்துகின்றன.
நீட்டுக்கு எதிராக முதன் முதலில் எச்சரிக்கைக் குரல் எழுப்பிய மாநிலம் தமிழ்நாடுதான். நீட் அறிமுகப்படுத்தப்பட்ட போது மத்திய அரசு, ‘பல நுழைவுத் தேர்வுகளை எழுதும் சுமை குறையும். கேப்பிடேஷன் கட்டணம் மற்றும் வணிகமயமாக்கல் ஒழியும்.
மருத்துவக் கல்வித் தரம் உயரும்’ என 3 முக்கிய வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், இந்த 3 வாக்குறுதிகளிலும் நீட் முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளது. சமத்துவமின்மையைக் குறைப்பதற்குப் பதிலாக, கற்றலின் மையத்தைப் பள்ளிகளிலிருந்து பயிற்சி மையங்களுக்கு நீட் மாற்றிவிட்டது.
இதன்மூலம் கிராமப்புற, அரசுப் பள்ளி, முதல் தலைமுறை மற்றும் தாய்மொழி வழியில் பயிலும் மாணவர்கள் கடுமையாகப் பின்னடைவை சந்திக்கின்றனர். கேப்பிடேஷன் கட்டணத்துக்குப் பதிலாக, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பயிற்சி மையக் கட்டணம் அந்த இடத்தைப் பிடித்துள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் தனியார் கல்லூரி இடங்களை நிரப்புவதற்காக, தகுதிக்கான பெர்சென்டைல் பலமுறை பூஜ்ஜியம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இது தகுதியை முன்னிறுத்தும் முறை அல்ல; வசதி படைத்தவர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் முறையாகும்.
அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் பள்ளிக் கல்வி மதிப்பெண்களைச் சமன்படுத்தும் முறையிலேயே சேர்க்கை நடைபெறுகிறது. நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரைப்படி தமிழ்நாடு சட்டப்பேரவை நீட் விலக்கு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியது.
மருத்துவக் கல்லூரிகளை நிறுவி, நிதியளித்து பராமரிக்கும் மாநிலங்களுக்கு, மாணவர் சேர்க்கையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும்.
மத்திய அரசு ஒற்றைத்துவ மனப்போக்கைக் கைவிட்டு, மாநிலங்கள் மற்றும் மாணவர்கள் மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டும். மருத்துவக் கல்வியின் எதிர்காலம், நியாயமான, கூட்டாட்சித்தத்துவத்தை மதிக்கும் அணுகுமுறையையே கோருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.