லஞ்சத்தின் மீதான வெறுப்பால் 3 ஆண்டுகளில் 1,500 வெடிகுண்டு மிரட்டல்கள்: நெல்லை இன்ஜினீயர் வாக்குமூலம்

சரத் சங்கர் சுப்பிரமணியன்

சரத் சங்கர் சுப்பிரமணியன்

Updated on
2 min read

சென்னை: ‘லஞ்சத்தின் மீதான வெறுப்பால் கடந்த 3 ஆண்டுகளில் 1,500 வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்தேன்’ என கைதான நெல்லை மாவட்ட இன்ஜினீயர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த 2023 முதல் 2025 வரை விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், ஆளுநர் மாளிகை, அண்ணா பல்கலைக்கழகம், விமான நிலையம், நீதிமன்றங்கள், பிரபல நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்களின் வீடுகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு 1,500-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்களை மர்ம நபர் அனுப்பி போலீஸாருக்கு பெரும் சவாலாக இருந்தார்.

போலி இ-மெயில்கள்

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீஸார் பல மணி நேரம் சோதனை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. விமான சேவைகளும் பலமுறை பாதிக்கப்பட்டன.

மிரட்டல்ஆசாமி, தன்னை போலீஸார் அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக விபிஎன், டார்க் வெப் மற்றும் போலி இ-மெயில் கணக்குகளை பயன்படுத்தி வந்தார்.

இருப்பினும், தொழில்நுட்ப தடயத்தின் மூலம் அவரது செல்போன் மற்றும் அடையாளத்தை தமிழக தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்தனர்.

அந்த நபர், அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலம், ஆஸ்டின் நகரில் வசித்து, அங்குள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இன்ஜினீயரான திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சரத் சங்கர் சுப்பிரமணியன் (30) என்பது தெரியவந்தது.

ஆனால் அதை வெளிப்படுத்தாமல், அவர் தமிழகம் வரும் போது கைது செய்யலாம் என போலீஸார் காத்திருந்தனர். மேலும், அவரது புகைப்படத்தை அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு செல்வதற்காக, விமானத்தில் சென்னைக்கு சரத் சங்கர் சுப்பிரமணியன் வந்தார்.

அப்போது, விமான நிலைய அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்து, தமிழக தீவிரவாத தடுப்பு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பரபரப்பு வாக்குமூலம்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து, போலீஸாரிடம் சரத் சங்கர் சுப்பிரமணியன் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் லஞ்சம் அதிகரித்து விட்டது.

என்னை போன்றவர்கள் நன்றாக படிப்பதற்கும், நல்ல வேலையில் சேர்வதற்கும் லஞ்ச குறுக்கே நிற்கிறது. திறமை இல்லாதவர்கள் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து தாங்கள் நினைத்ததை சாதித்து விடுகிறார்கள்.

நான் சென்னையில் உள்ள ஒரு இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்தேன். எனக்கு தெரிந்த திறமை இல்லாத பெண் இன்ஜினீயர் ஒருவர் லஞ்சம் மூலம் பிரபலமான பல்கலைக்கழகத்தில் வேலைக்கு போய்விட்டார். டிஎன்பிஎஸ்சி வாயிலாக நான் பலமுறை தேர்வு எழுதியும், எனக்கு வேலை கிடைக்கவில்லை.

இறுதியில் பல போராட்டங்களைச் சந்தித்து அமெரிக்கா சென்று தற்போது கை நிறைய சம்பாதிக்கிறேன். தமிழகத்தில் உள்ள லஞ்சத்துக்கு எதிராகத்தான், வெடிகுண்டு புரளியை கிளப்பிவிட்டு பீதியை உண்டாக்கினேன். தவறான அரசியலை தட்டிக்கேட்க, செல்வாக்குமிக்க நடிகர் - நடிகைகள் கூட முன்வரவில்லை.

இதனால் அவர்கள் வீடுகளுக்கும் வெடி குண்டு மிரட்டல் விடுத்தேன். மேலும், அரசியல்வாதிகளைப் பழிவாங்க அவர்கள் வீடுகளுக்கும், சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்தேன். இவ்வாறு வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இவர் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>சரத் சங்கர் சுப்பிரமணியன்</p></div>
வினாத்தாள் கசிவு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று விவாதம்: செல்ஃபி வீடியோ மூலம் பிரதமர் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in