

சென்னை: தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ள அதேவேளையில், தமிழகத்தின் நிதிநிலை குறித்த முதல்வரின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள புதிய அறிவிப்புகளை வரவேற்கிறேன்.
கடந்த அரசு ரூ.10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு கஜானாவைத் துடைத்துவிட்டுச் சென்றுள்ளதாகத் தங்களின் முதல் உரையிலேயே குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
தமிழகத்தின் கடன் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு உட்பட்டே இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? பிப்ரவரி மாத பட்ஜெட்டிலேயே நிதிநிலை குறித்து நாங்கள் தெளிவாக விளக்கிவிட்டோம்.
அதற்குப் பிறகுதான் நீங்கள் மக்களுக்குப் பல வாக்குறுதிகளை அளித்தீர்கள். இப்போது ‘அரசிடம் பணம் இல்லை’ எனப் பேசி, உங்களுக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றி திசைதிருப்பாதீர்கள்.
எடுத்த எடுப்பிலேயே நிதிப் பற்றாக்குறையைப் பேச ஆரம்பிக்க வேண்டாம். மக்களுக்குக் கொடுக்கத் தேவையான மனசும், ஆட்சித் திறமையும்தான் மிக முக்கியம். கடந்த ஐந்து ஆண்டுகளில் பல சவால்களைச் சமாளித்துதான் நாங்கள் எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
நடைமுறைக்குச் சாத்தியமான வாக்குறுதிகளை மட்டுமே அளிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள், இப்போதுதான் நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள்.
வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்ற நுணுக்கங்களை விரைவில் கற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.