

சென்னை, கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக பதவியேற்றுக் கொண்ட கருப்பையா, முதல்வர் ஜோசப் விஜய்க்கு மலர்க்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். உடன் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உள்ளார்.
சென்னை: சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ எம்.வி.கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றுள்ள புதிய எம்எல்ஏக்களுக்கு அவர் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்த தவெக, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விசிக ஆகிய கட்சிகளின் 13 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய் நேற்று பதவியேற்றார். இதற்கிடையே, புதிய சட்டப்பேரவை அமைந்தால், முதலில் தற்காலிக பேரவைத் தலைவர் நியமிக்கப்படுவார். தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்களுக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
அந்த வகையில், தற்காலிக பேரவைத் தலைவராக சோழவந்தான் தொகுதி தவெக உறுப்பினர் எம்.வி.கருப்பையாவை நியமிப்பதற்கான கோப்பில், முதல்வர் ஜோசப் விஜய்யிடம், பேரவைச் செயலர் கி.சீனிவாசன் ஒப்புதல் பெற்றார்.
இதையடுத்து, ஆளுநர் மாளிகையில், தற்காலிக பேரவைத் தலைவராக கருப்பையாவுக்கு ஆளுநர் அர்லேகர் நேற்று மாலை 4 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில், முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
சட்டப்பேரவைச் செயலகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில், தற்காலிக பேரவைத் தலைவர் முன்னிலையில் முதல்வர் ஜோசப் விஜய் உட்பட பேரவையின் அனைத்து உறுப்பினர்களும் எம்எல்ஏவாக பதவியேற்கின்றனர்.
இதையொட்டி, அனைத்து உறுப்பினர்களும் தேர்தல் வெற்றிச் சான்றிதழ்களை எடுத்து வருமாறு பேரவைச் செயலகம் அறிவுறுத்தியுள்ளது சட்டப்பேரவையில், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை நிரந்தர பேரவைத் தலைவர்தான் நடத்த வேண்டும்.
எனவே, நிரந்தர பேரவைத் தலைவர் மற்றும் பேரவை துணைத் தலைவர் தேர்வு நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் நடைபெறும். மே 13-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளதால், நாளையே (12-ம் தேதி) வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி தவெக உறுப்பினர் ஜேசிடி. பிரபாகர் பேரவைத் தலைவர் ஆவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.