

சென்னை: கனிம வளங்கள் தொடர்ந்து கடத்தப்படுவதை தடுக்கக் கோரி நாளை முதல் 3 நாட்கள் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: லாரிகளில் அனுமதிக்கப்பட்ட எடையான 22 டன் மீறி, 30 டன் வரை கூடுதல் பாரம் ஏற்றுவதால்தான் கனிம வளங்கள் தொடர்ந்து கடத்தப்படுகின்றன.
கூடுதல் எடை ஏற்றுவதற்கு ஆர்டிஓ மற்றும் காவல்துறை மூலம் லஞ்சம் பெறப்படுகிறது. இதனால் அரசுக்கும் பொதுமக்களுக்கும் பெருமளவு இழப்பு ஏற்படுகிறது.
இந்த ஆட்சி பொறுப்பேற்ற முதல் 3 மாதங்கள் எந்தவித லஞ்சமும் கனிமவள கொள்ளைகளும் இல்லாமல் இருந்தது.
ஆனால் தற்போது கடந்த ஆட்சியைப் போலவே இந்த ஆட்சியிலும் லஞ்சம் கைமாறுகிறது. மலைகளில் கனிமக் கொள்ளை தடையின்றி நடக்கிறது. ஆர்டிஓவின் புரோக்கர்கள் பலர் தீபாவளி பண்டிகை முன்னிட்டு எங்களிடம் மாமுல் கேட்கின்றனர்.
ஜிபே மூலமாக அனுப்பும்படி மிரட்டுகின்றனர். இதைப்பற்றி கனிம வளத்துறை அதிகாரியிடம் எடுத்துக் கூறினாலும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. கனிம வளக் கடத்தலை தடுக்க ஜிபிஎஸ் மற்றும் இ-வே பில் போன்ற முறைகளை கொண்டுவருவதாக கூறப்பட்டாலும், அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
கடந்த இரண்டு கூட்டங்களில் ஜிபிஎஸ் கருவிகள் மாற்றப்படும் என்று சொன்னார்கள். ஆனால் அதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
இதனால் இந்த பிரச்சினைகளை முதல்வர் கவனத்துக்கு எடுத்து செல்வதற்காக நாளை (நவ.1) முதல் 3 நாட்கள் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.
அதன்படி 8 மாவட்டங்களில் 20 ஆயிரம் லாரிகள் இயங்காது. கனிம வளங்களை தடுக்க ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களை போல கடுமையான விதிகளை கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.