

சென்னை: போக்குவரத்து போலீஸார் சென்னை முழுவதும் ஒரே நேரத்தில் வாகன தணிக்கை மேற்கொண்டு விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
சென்னை பெருநகரில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக இன்று (சனிக்கிழமை) ‘விதிமீறல்களற்ற நாள்’ (ஜீரோ டாலரன்ஸ் டே) கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, சென்னை பெருநகரில் உள்ள அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் பிரதான சாலைகளில் சிறப்புத் தணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
அப்போது போக்குவரத்து விதிகளை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைபிடிக்க வேண்டும்.
போக்குவரத்து சிக்னல்களை மதித்து நடக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.
நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போர் இருக்கைப் பட்டை அணிய வேண்டும். மேலும், அதிவேகமாகவும், ஆபத்தான முறையிலும் வாகனங்களை ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
வாகனம் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தக் கூடாது. இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலை விபத்துகளைத் தடுப்பதும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதும் போக்குவரத்துக் காவல்துறையின் முக்கிய நோக்கமாகும். மனித உயிர் விலைமதிப்பற்றது.
எனவே, பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றி, ‘விதிமீறல்களற்ற நாள்’ நடவடிக்கை வெற்றிபெற போக்குவரத்துக் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.