

மதுரை அரசு மருத்துவமனை முன் சாலைமறியலில் ஈடுபட்ட உயிரிழந்த லாரி ஓட்டுநரின் உறவினர்கள். (உள்படம்) பாலகிருஷ்ணன்.
மதுரை: மதுரை அருகே காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் மர்மமாக உயிரிழந்த விவகாரத்தில், தங்களுக்கு நிதி வேண்டாம்; நீதிதான் வேண்டும் என அவரது உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள டி. அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ரங்கப்பன் மகன் பாலகிருஷ்ணன்(42). இவர் மதுரையைச் சேர்ந்த லாரி உரிமையாளர் நாகராஜிடம் ஓட்டுநராகப் பணியாற்றினார்.
இவர் தேவாரத்தில் இருந்து மதுரைக்கு ஏலக்காய் மற்றும் பண்டல்களை ஏற்றிச் சென்றபோது, வாலாந்தூர் கண்மாய்க் கரை அருகே நவ.4-ம் தேதி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுதொடர்பாக முதலில் வாலாந்தூர் காவல் நிலையத்தில் விபத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தீ விபத்து தொடர்பாக விசாரணைக்காக, செக்கானூரணி காவல் நிலையத்துக்கு நவ.13-ம் தேதி அழைக்கப்பட்ட பாலகிருஷ்ணன், அடுத்த நாள் (நவ.14) அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரது உடலை போலீஸார் கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர். இந்தச் சம்பவம் காவல் நிலையத்திலேயே நிகழ்ந்துள்ளதால், பேரையூர் நீதித்துறை நடுவர் ஆனந்தராஜா செக்கானூரணி காவல் நிலையத்துக்குச் சென்று சம்பவம் நடந்த கழிப்பறை மற்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்ட இடங்களை நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
மேலும், அங்கு பணியில் இருந்த காவல் அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தினார். நேற்று 2 வது நாளாக ஆய்வாளர் முத்து உள்ளிட்ட பணியில் இருந்த போலீஸாரிடம் விசாரித்தார். இதைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணனின் உடல், 3 மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவர் குழுவினரால் உடற்கூறு செய்யப்பட்டது.
இந்நிலையில், பாலகிருஷ்ணனை காவலர்கள் தாக்கிக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடுவதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும், அவரது உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து, அரசு மருத்துவமனை முன் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
உயிரிழந்த லாரி ஓட்டுநரின் மனைவி சுதா கூறியதாவது: எனது கணவருக்கு காவல்துறையினர் கடும் அழுத்தம் கொடுத்தனர். தீப்பிடித்து எரிந்த ஏலக்காய் மூட்டைகளுக்கு எனது கணவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று காவல்துறையினர் வற்புறுத்தினர். சம்பவத்துக்கு 2 நாட்களுக்கு முன்பே அவரை அழைத்து விசாரித்தனர். அவர் ஏற்றி வந்த லாரியில் ஏலக்காய், கடலை மூட்டைகள் இருந்ததாக எனது கணவர் கூறினார்.
எனது கணவர் முன்பு மகாராஷ்டிராவில் லாரி ஓட்டி வந்தார். பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, தற்போது மதுரை - தேவாரத்துக்கு லாரி ஓட்டி வந்தார். அதற்குள் இப்படியாகி விட்டது. லாரியில் இருந்த ஏலக்காய் மூட்டைகளை யார் எடுத்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், அனைத்துக்கும் எனது கணவர்தான் பொறுப்பு எனக்கூறி அவரை கொடுமைப்படுத்தியுள்ளனர். அவர் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை அல்ல. எனவே, எங்களுக்கு அரசு கொடுக்கும் நிதி வேண்டாம், நீதிதான் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சிபிசிஐடி விசாரணை தொடக்கம்: இதற்கிடையே லாரி ஓட்டுநர் மர்மமாக உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதால் முதல்கட்ட விசாரணை நேற்று தொடங்கியது. தென்மண்டல சிபிசிஐடி எஸ்பி ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார்.
அவர் பாலகிருஷ்ணன் மரணம் தொடர்பான முதல்கட்ட விவரங்களைச் சேகரித்து விசாரணையைத் தொடங்கினார். சிபிசிஐடி எஸ்பி ஸ்டாலின், ஆய்வாளர் சுரேஷ் உள்ளிட்டோர் செக்கானூரணி காவல் நிலையம் மற்றும் வாலாந்தூர் அருகே ஏலக்காய் லோடு லாரி தீவிபத்து ஏற்பட்ட இடத்துக்கு நேற்றிரவு சென்று ஆய்வு செய்தனர்.
சிசிடிவி காட்சிகள் வெளியீடு: செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் அமர்ந்திருப்பது, அவர் காவல் நிலைய கழிப்பறைக்குச் செல்வது, போலீஸார் கழிவறையை நோக்கி ஓடுவது போன்ற காட்சிகள் அடங்கிய சிசிடிடி கேமரா பதிவு நேற்று சமூக வலை தளங்களில் வெளியானது. அந்தக் கட்சிகள் தொடர்ச்சியாக இல்லாமல் தனித்தனியே இருந்தது.
ஆனால், லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனை தாக்கும் வீடியோ பதிவுகளைத் தவிர்த்துவிட்டு அவர்களுக்குச் சாதகமான காட்சிகளை மட்டும் போலீஸார் வெளியிட்டுள்ளனர் என பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.