சென்னை: 2021 முதல் 25-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த மாதம் 28-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் எஸ்.விசாகன் ஐ.ஏ.எஸ். டாஸ்மாக் அதிகாரிகள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், பாஸ்கர் மற்றும் செந்தில் பாலாஜியுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் ரதேஷ், கார்த்திக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களாக கூறப்படும் கார்த்திக், ரமேஷ் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை, வங்கி பரிவர்த்தனைகள், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் செந்தில் பாலாஜியின் நண்பர் ரதேஷை கண்டுபிடித்து விசாரணைக்கு உட்படுத்தும் வகையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.