

சென்னை: லஞ்சம் கேட்ட போக்குவரத்து எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது சென்னை காவல் ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவின் முதல் நடவடிக்கையாக ஆகும்.
சென்னை காவல்துறையில் பணியாற்றும் போலீஸார் லஞ்சம் கேட்பது குறித்து பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கும் வகையில், காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு’ கடந்த வாரம் தொடங்கப்பட்டது.
இதற்காக 7871723000 என்ற தனிப்பிரிவு வாட்ஸ்அப் எண்ணும் அறிவிக்கப்பட்டது. இந்த எண்ணில் போலீசார் லஞ்சம் கேட்பது தொடர்பாக பொதுமக்கள் புகார் மற்றும் ஆதாரங்களை அனுப்பலாம் என்றும், புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல் ஆணையர் தெரிவித்திருந்தார். புதிய முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாருக்கு காவல் ஆணையர் அமல்ராஜ் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.
“எந்த வொரு சூழலிலும் நான் லஞ்சம் வாங்க மாட்டேன். அதேபோல் காவல் துறையில் யார் லஞ்சம் வாங்கினாலும் அவர்களை தப்ப விடமாட்டேன்” என்று அவர் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், புதிய தனிப்பிரிவுக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் போக்குவரத்து போலீஸ் எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றை போக்குவரத்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அந்த வாகனத்தை மீண்டும் விடுவிப்பதற்காக எஸ்ஐ செல்வராஜ், வாகன உரிமையாளரிடம் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து வாகன உரிமையாளர் சென்னை காவல்துறையின் ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளித்தார்.
புகாரைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், வாகனத்தை விடுவிப்பதற்காக ரூ.500 லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, எஸ்ஐ செல்வராஜை ஆயுதப்படைக்கு மாற்றி காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
புதியதாக தொடங்கப்பட்ட ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவுக்கு கிடைத்த முதல் புகாரிலேயே போலீஸ் எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது, லஞ்சப் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற காவல்துறையின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.