

நயினார் நாகேந்திரன்
சென்னை: “இந்துக்களின் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு உரிமைகள் மீது தொடரும் அடக்குமுறைகளை ஆளும் அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தால், சமூகத்தில் சகோதரத்துவம் எப்படி மலரும்?” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து லிங்கமலையும் குறி வைக்கப்படுகிறதா? புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டிக்கு அருகில், 11-12 நூற்றாண்டுகளைச் சேர்ந்த பழமையான சிவன் கோயில் அமைந்துள்ள லிங்கமலைப் பகுதியில், சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிலுவை அருகே, கோட்டாட்சியரின் தடை உத்தரவையும் மீறி, நவம்பர் 24-ஆம் தேதி ‘மகா கார்த்திகை’ தீபத் திருநாளன்று ஜெபம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதைத் தட்டிக் கேட்ட இந்து பக்தர் மாரிமுத்து கொடூரமாகத் தாக்கப்பட்டதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் கடும் கண்டனத்திற்குரியவை.
அரிய கல்வெட்டுகள், சிற்பங்கள், நந்தி சிலை உட்பட சோழர்கால வரலாற்று சான்றுகள் நிறைந்திருக்கும் லிங்கமலைப் பகுதியில், கிறிஸ்துவ ஜெபக்கூட்டம் நடத்த இவர்களுக்கு எப்படி துணிச்சல் வந்தது?
திருப்பரங்குன்றத் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதைத் திட்டமிட்டு தடுத்துக் கொண்டிருக்கும் தவெக ஆட்சியில், இந்துக்களின் உரிமைகள் மீது கை வைத்தால் யார் என்ன கேட்கப் போகிறார்கள் என்ற துணிச்சலா? அல்லது சபாநாயகர் முதல் முதல்வர், முக்கிய அமைச்சர்கள் வரை அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கும் தவெகவின் சிறுபான்மையின அரசு, இந்துக்களுக்கு ஆதரவாக எப்படியும் குரல் கொடுக்காது என்ற இளக்காரமா?
இந்துக்களின் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு உரிமைகள் மீது தொடரும் இதுபோன்ற அடக்குமுறைகளை ஆளும் அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தால், சமூகத்தில் சகோதரத்துவம் எப்படி மலரும்?
சமத்துவம் எப்படி தழைத்தோங்கும்? எனவே, ‘இது அனைவருக்குமான ஆட்சி’ என்பதை வெறும் வார்த்தைகளால் மட்டும் சொன்னால் போதாது, அதை தனது செயலிலும் விஜய் செய்து காட்ட வேண்டும். மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் இந்துக்களின் உரிமைகளையும் தவெக அரசு பாதுகாக்க வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.