

திருப்பரங்குன்ற மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் ‘தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க மதவாத சக்திகள் முயற்சி’ என ஒரு தரப்பினரும், ‘இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் திமுக அரசு’ என்று இன்னொரு தரப்பினரும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ‘எம்மதமும் சம்மதம்’ - எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த ஸ்டாலின் மாடல் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.” என்று கூறியுள்ளார்.
திமுக மூத்த தலைவர் ரகுபதி: “பாஜக, ஆர்எஸ்எஸ்சின் கைக்கூலியாக மாறி அண்ணா திமுகவை அமித் ஷா திமுகவாக மாற்றிய பழனிசாமி, தமிழ்நாட்டு மக்களின் நலனைப் பற்றி துளியும் அக்கறையின்றி அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணைபோய் நிற்பது வெட்கக்கேடு. மதப்பிரிவினைவாத சக்திகளும், அடிமைக் கைக்கூலிகளும் எவ்வளவு முயன்றாலும், முதல்வர் ஸ்டாலின் இருக்கும் வரை தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க முடியாது. மதங்களைக் கடந்து உறவுகளாய் வாழ்ந்துவரும் தமிழ்நாட்டு மக்களிடம் உங்களின் தகிடுதத்தம் எதுவும் எடுபடாது. எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என்றார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: “திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டதை, தமிழகம் முழுவதற்குமான வெற்றியாகப் பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தேவையின்றி தலையிடுகிறது. நீதிபதியின் தீர்ப்பை அரசும், காவல் துறையும் ஏற்பதுதான் நியாயம். தமிழக அரசு தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராகவே செயல்படுகிறது. இமயமலைக்கு நிகரானது இந்த இடம் என பரிபாடலில் சொல்லப்பட்டுள்ளது. இவ்விடத்தில் திமுக அரசு கை வைத்துள்ளது. இனிமேல் திமுக அரசு இருக்கவே இருக்காது.” என்றார்.
விசிக தலைவர் திருமாவளவன்: “திருப்பரங்குன்றத்தில் கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்யவேண்டும். தனது பதவியைத் தவறாக பயன்படுத்தும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவியில் இருந்து நீக்குவதற்கு இம்பீச்மெண்ட் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: “திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் தீபம் ஏற்றும் ஆன்மிக நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற சம்பவம் தமிழகத்தின் அமைதி, ஒற்றுமை மற்றும் சட்ட ஒழுங்கு சூழலுக்கு சவாலாகும். ஆன்மிகத்தில் எப்போதும் அரசியல் கலக்கக்கூடாது, ஆன்மிகத்தை வைத்து கலவரம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்ய நினைப்பவர்களை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.” என்றார்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்: “சிறுபான்மையினர் வாக்குகளுக்காக திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசியலாக்குகிறார்கள். திமுக அரசு இந்துக்களுக்கு மட்டும் விரோதமாக செயல்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் வரும் தேர்தலில் பதிலடி கிடைக்கும். 100 ஆண்டு போராட்டத்துக்கு தற்போது வரலாற்று வெற்றி கிடைத்துள்ளது.” என்று கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: “தமிழகம் முழுவதும் தீபத் திருவிழா கொண்டாடப்பட்ட நிலையில், திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி அமைப்பினர் பதற்றத்தை உருவாக்கியுள்ளனர். இந்தச் சூழலில் மதுரை மக்கள் அமைதி காத்தது பாராட்டுக்குரியது. மதச்சார்பின்மையின் அடித்தளத்தைச் சிதைக்கும் வகையில் நீதிபதி அளித்துள்ள தீர்ப்பு ஏற்புடையதல்ல.” என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம்: “ஜி.ஆர் சுவாமிநாதன் நீதிபதியாக நீடிப்பதற்கே தகுதியற்றவர் இப்படி மக்கள் மத்தியிலே மோதலையும் மாநில அரசுக்கும், மத்திய படைக்குமான மோதலை உருவாக்கக்கூடிய வகையில் உத்தரவை வெளியிட்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது தலைமை நீதிபதி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: “ஆன்மிகத்தில் சர்ச்சை வரக் கூடாது, அரசியலும் செய்யக் கூடாது, குழப்பத்தையும் ஏற்படுத்தக் கூடாது. நீதிமன்றம் சொல்வதை கேட்க வேண்டும்.” என்றார்.
திராவிட கழக தலைவர் வீரமணி: “தீபம் ஏற்றும் நிகழ்ச்சி என்ற பெயரில், மதவாத சக்திகள் தங்கள் விஷமத்தின்மூலம், மதக் கலவரத்துக்கு ஏற்பாடு செய்யத் தீவிரமாக முயற்சித்துள்ளனர். சட்டம் - ஒழுங்குக்கு எதிராக கலவரத்தைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, காவலர்களை தாக்கி, காலித்தனத்தில் ஈடுபட்டுள்ளது கண்டனத்துக்குரியது.” என்றார்.
இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம.ரவிக்குமார் (திருப்பரங்குன்றம் வழக்கின் மனுதாரர்): “இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முருகனுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடக்கக்கூடிய அநியாயங்களுக்கு சவுக்கடி கிடைத்திருக்கிறது. சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று கூறிக்கொண்டு, கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை தமிழக அரசு புண்படுத்திவிட்டது.” என்றார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வழக்கமாக தீபம் ஏற்றப்பட்டு வந்த தீப மண்டபத்தில் ஏற்றாமல் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே கார்த்திகை தீபம் ஏற்றுவதன் மூலம் சமய நல்லிணக்கத்தை சீர் குலைக்க முயலும் மதவாத சக்திகள் திருப்பரங்குன்றத்தில் வழிபாட்டுத் தலத்தை வன்முறை களமாக மாற்றத் துடிப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.” என்று தெரிவித்தார்.
தவாக தலைவர் வேல்முருகன்: “எந்த ஒரு அரசியல் கட்சியும் அதன் மீது, தனித்த உரிமை கொண்டாடுவதையோ, அதை வைத்து அரசியலாக்குவதையோ, தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது. தமிழகம், பாசிசத்துக்கு ஒருபோதும் தலை வணங்காது. ஆன்மீகத்தை அரசியல் மோதலின் தீக்குச்சியாக மாற்ற அனுமதிக்காது.” என்றார்.
எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக்: “உயர் நீதிமன்றத்தின் பாதுகாப்புப் பணியில் இருக்கும் சிஐஎஸ்எஃப் பணியாளர்களை வேறு எந்த நோக்கத்திற்கும் பணி ஒதுக்கீடு செய்வது முகாந்திரத்தில் சட்டவிரோதமானது மற்றும் நீதித்துறை அதிகாரத்தின் பகிரங்க துஷ்பிரயோகமாகும். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் நீதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் இம்பீச்மென்ட் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.” என்றார்.
இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன்: “இந்த விவகாரத்தில், காவல் துறை உயரதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் பின்னணியில் இருப்பதால்தான், காவல் ஆணையர் லோகநாதன் தைரியமாக செயல்படுகிறார். அவருக்குப் பின்னால் திமுக அரசு உள்ளது. முகலாயர் ஆட்சியில் இந்துக்கள் எந்த அளவுக்கு கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பதை வரலாற்றில் படித்துள்ளோம். தற்போது அந்த நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினை அவுரங்கசீப் வடிவில் பார்க்கிறேன். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்துக்கள் திமுகவுக்கு பதிலடி கொடுப்பார்கள்.” என்றார்.
தமிழக தர்காக்களின் முன்னேற்ற பேரவை மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.பாக்கர் அலி: “திருப்பரங்குன்றத்தில் தர்கா தொடர்பான விவகாரத்தில் பதற்றத்தை தணிப்பதற்காக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது. அதேநேரத்தில், பாஜக மற்றும் இந்து முன்னணியினர் அங்கு தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துவதை கண்டிக்கிறோம். அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் தேவையற்ற பதற்றத்தை யார் உருவாக்கினாலும் அது தவறான போக்கு. இங்கு அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.” என்றார்.