

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஜூலை 17, 20 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய உயரதிகாரியும், விஞ்ஞானியுமான வி.ஆர்.துரை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 17-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூலை 18, 19 ஆகிய தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 20-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் ஜூலை 16-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இது தவிர உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜூலை 15-ம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.