

ஊட்டி: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தாயின் இரண்டாம் கணவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் தேவாலா எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகத்தாய். இவருக்கு 13 வயதில் மகள் உள்ளார். ஆறுமுகத்தாயின் கணவர் பிரிந்து சென்ற நிலையில், ராஜா (44) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, சிறுமியை மிரட்டி ராஜா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 2020 மார்ச் மாதம் சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் தெரிந்ததால், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் அவர் கர்ப்பமாக இருந்துள்ளார்.
சிறுமியிடம் விசாரித்தபோது, ராஜா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததை தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் போக்சோ சட்டத்தில் தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கு ஊட்டி சிறப்பு விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், ராஜாவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி செந்தில்குமார் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். மேலும், சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.