

மதுரை: தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகளைப் பொறுத்து இருந்து பார்ப்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அவர் தலைமையில் மதுரையில் நேற்று நடந்தது. முன்னாள் எம்எல்ஏ பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு திணிக்க முயற்சிக்கும் மும்மொழித் திட்டத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும். இதை அனுமதித்தால் மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாகும். ஆட்சியில் பங்கேற்க அழைத்ததால் காங்கிரஸ் பங்கேற்றுள்ளது. கூட்டாட்சி தத்துவத்துக்கு இடையூறு ஏற்படாமல் மாநில சுயாட்சியைப் பெறும் வகையில் அரசு செயல்பட வேண்டும்.
பாஜகவின் திட்டங்களை நுழைய விடாமல் மக்கள், தோல்வியைக் கொடுத்துள்ளனர். கூட்டணி ஆட்சி எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம். 6 மாதம் அவகாசம் கொடுக்கலாம். அனுபவமின்றி இதுவரை அதிகாரம் பெறாமல் இருந்தவர்கள், ஆய்வு என்ற பெயரில் அரசின் நற்பெயரைக் கெடுத்தால் தடுக்க முதல்வர் முன்வரவேண்டும்.
கூட்டணி விவகாரத்தில் திருமாவளவனின் கருத்துக்கு நான் விளக்க உரை எழுதுபவன் அல்ல. கம்யூனிஸ்டுகள், விசிக எடுத்த முடிவு எல்லாம் அவர்களின் நிலைப்பாடு. மதிமுக வாக்கு வங்கி அப்படியே உள்ளது.
கடந்த 17 நாட்களில் தவெக சில நல்ல காரியங்களை செய்துள்ளது. திமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. ராமர் இருக்கும் இடமே அயோத்தி என்பது போல காங்கிரஸ் இருக்கும் இடம் மதசார்பின்மை என்பது சரியல்ல. மதவாதத்தை எதிர்க்க பல்வேறு கட்சிகளும் இருக்கின்றன.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர் மனதில் பட்டதைத் தெரிவிக்கிறார். உள்ளாட்சித் தேர்தல் குறித்து தற்போது பேச முடியாது. அதிமுக ஆட்சியமைக்க திமுக ஆதரவு என்ற பெருங்குழப்பம் சுற்றிக் கொண்டிருக்கிறது. இதைப் பற்றியெல்லாம் நான் கருத்துச் சொல்ல முடியாது. விஜய் என்னை சந்தித்தபோது அவரது அமைச்சரவையில் இடம் பற்றி எதுவும் பேசவில்லை.
வாஜ்பாயின் மத்திய அமைச்சரவையில் எனக்கு பதவி கொடுத்தபோது மறுத்தவன். என்றைக்கும் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டவன் நானல்ல. இனிமேலும் ஏற்படாது. இவ்வாறு வைகோ தெரிவித்தார்.