

திருச்சி: தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என தவெக மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: தவெகவில் தற்போது பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் தன்னெழுச்சியாக இணைந்து வருகின்றனர். எனது தலைமையில் இணைபவர்களிடம், பதவி வாங்கித் தருவதாக எந்த உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. இந்த ஆட்சி தொடர அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் நோக்கில் அனைவரும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா வளர்த்த அதிமுகவின் வளர்ச்சிக்கு நாங்களும் பாடுபட்டோம். ஆனால், அதிமுகவை இப்போது பொதுச் செயலாளர் பழனிசாமி சிதைத்துவிட்டார்.
தமிழக முதல்வர் விஜய், விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திப்பார். அப்போது அவர் திருச்சிக்கும் வந்து மக்களை சந்திக்க உள்ளார். இவ்வாறு தெரிவித்தார்.